

ராஜீவ் கொலை வழக்கை விரிவாக விசாரிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், விசாரணை அறிக் கையை தாக்கல் செய்யுமாறும் எப்போது விசாரணை முடியும் என்று தெரிவிக்குமாறும் சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது நிகழ்ந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 7 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இதில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேரின் மரண தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டது. மற்ற 3 பேருக்கு ஏற்கெனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், குற்றவாளி யான பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், “ராஜீவ் கொலை வழக்கில் பல முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் மிகப்பெரிய சதி நடந்துள்ளதாகவும் ஜெயின் குழு அறிக்கை சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்த பல்நோக்கு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. சிபிஐ அமைப்பின் கீழ் செயல்படும் இக்குழு முறையாக விசாரிக்க வில்லை. மேலும் பல ஆண்டு களாகியும் இன்னும் விசாரணை முடியவில்லை. எனவே, இந்த வழக்கை விரிவாகவும் விரைவாக வும் விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசார ணைக்கு வந்தது.
இதையடுத்து நீதிபதிகள் கூறும்போது, “இந்த வழக்கு விசாரணை குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். எப்போது விசாரணை முடியும் என்பதையும் தெரிவிக்க வேண்டும். இந்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 16-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர்.