

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் நிலக்கரி துறை முன்னாள் செயலர் ஹெச்.சி.குப்தாவுக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய மூத்த அரசு அதிகாரிகள் கே.எஸ்.க்ரோபா, கே.சி.சமாரியா ஆகிய இருவருக்கும் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராசர் உத்தரவிட்டார்.
சிறைத் தண்டனையை தவிர மூவருக்கும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இவர்களைத் தவிர சட்டவிரோத சுரங்க ஒதுக்கீட்டால் லாபமடைந்த கமல் ஸ்பாஞ் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடட் தனியார் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநர் பவன் குமார் அலுவாலியாவுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.1 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தண்டனை அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே அனைவருக்கும் ஜாமீனும் வழங்கப்பட்டது. இதனையடுத்து அனைவரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார்கள் எனத் தெரிகிறது.