

பெண்களின் அடிப்படை உரிமைகள் மத ரீதியிலான தனிச்சட்டத்தின் பெயரால் பாதிக்கப்படக் கூடாது என, அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முஸ்லிம்களின் “முத்தலாக்” சட்டத்தால் பெண்கள் பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் நீதிமன்றத்தில் திருமணமான முஸ்லிம் பெண் ஒருவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், தனது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், இல்லாவிட்டால் விவகாரத்து செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் கூறியிருந்தார். எனவே, அவர் மீது கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் 19-ம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், வழக்கின் மீது நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் கூறியிருப்பதாவது:
முஸ்லிம் ஆண்கள் இதுபோன்ற முறையில் (முத்தலாக்) விவாகரத்து வழங்கக் கூடாது. இது சம உரிமைக்கு எதிரான போக்கு. தனிச்சட்டத்தை (முஸ்லிம்களின்) இந்திய அரசியல் சாசன அமைப்பு வகுத்துள்ள விதிகளின்படி அமல்படுத்த வேண்டும். பத்வா (விவாகரத்து) மற்றவர்களின் உரிமையைப் பாதிக்கக்கூடியதாக இருக்கக் கூடாது. பெண்களின் அடிப்படை உரிமைகள் மதரீதியிலான தனிச்சட்டத்தின் பெயரால் பாதிக்கப்படக் கூடாது.
இவ்வாறு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், இந்த வழக்கில் தன் மீதான கிரிமினல் குற்றச்சாட்டுகளை நீக்கக் கோரி கணவர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
“முத்தலாக்” விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன சிறப்பு அமர்வுக்கு ஏற்கெனவே மாற்றப்பட்டுள்ளது. நாளை (மே 11) வழக்கு மீதான விசாரணை நடைபெறுகிறது.