

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மனநல பரிசோதனைக்கு உட்பட கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் மறுத்துவிட்டார். தான் நலமாக இருப்பதாகக் கூறி மருத்துவர்களை திருப்பி அனுப்பினார்.
நீதிபதி கர்ணனுக்கு 4-ம் தேதி மனநல பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் இதற்கான மருத்துவர்கள் குழுவை கொல்கத்தா அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் என்றும் கடந்த 1-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுபோல மருத்துவ பரிசோதனை யின்போது, மருத்துவர்களுக்கு உதவுவதற்காக அதிகாரிகள் கொண்ட குழுவை அமைக்குமாறு மேற்குவங்க காவல் துறை தலைவருக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில், கொல் கத்தா பவ்லோவ் அரசு மனநல மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் கணேஷ் பிரசாத் தலைமை யிலான 4 மருத்துவர்கள் அடங்கிய குழு கொல்கத்தாவில் உள்ள நீதிபதி கர்ணனின் இல்லத்துக்கு நேற்று காலையில் சென்றனர். இவர்களுடன், பிதாநகர் காவல் துணை ஆணையர் தலைமை யிலான 20 போலீஸார் அடங்கிய குழுவினரும் சென்றனர்.
அப்போது மருத்துவ பரிசோதனைக்கு உட்பட மறுப்பு தெரிவித்த கர்ணன், மருத்துவர்கள் குழுவினரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தார். மருத்துவர்கள் குழுவின் தலைவருக்கு எழுதப்பட்டுள்ள அதில் கூறியிருப்பதாவது:
நான் நலமாக இருக்கிறேன். எனது மனநிலை சரியாக உள்ளது. எனவே, எனக்கு மருத்துவ பரிசோ தனை நடத்தத் தேவையில்லை. தலித் நீதிபதியை (என்னை) அவமானப் படுத்தும் வகையிலும் துன்புறுத்தும் வகையிலும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் இதுபோன்ற சோதனை நடத்துவதற்கு பாதுகாவலர்களின் ஒப்புதல் தேவை. அந்த வகையில் என்னு டைய மனைவி, மகன்கள் உள்ளிட்ட யாரும் இங்கு இல்லை. என்னுடைய மனைவியும் (பேராசிரியர்), மகனும் (பொறியாளர்) சென்னையில் உள்ளனர். மற்றொரு மகன் (பொறி யாளர்) பிரான்ஸில் பணிபுரிகிறார். இவர்களுடைய அனுமதி இல்லாமல் எனக்கு மருத்துவ பரிசோதனை நடத்த முடியாது.
இது மனநலம் பாதிக்கப்பட்ட நீதிபதிகளால் பிறப்பிக்கப்பட்ட கிறுக்குத்தனமான உத்தரவு. ஊழல் நீதிபதிகளுக்கு இந்த நீதிபதிகள் உறுதுணையாக இருப்பது ஆச்சரிய மாக உள்ளது. இதனால் நீதித் துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே, என் மீதான அவமதிப்பு வழக்கை ரத்து செய்து விட்டு, 7 நீதிபதிகளும் பதவி விலக வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகு மருத்துவக் குழு வினரும் போலீஸாரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி சி.எஸ்.கர்ணன், நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார் தெரிவித்தார். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது. இதை விசாரித்த 7 நீதிபதிகள் அமர்வு, நேரில் ஆஜராக உத்தரவிட்டும் நீதிபதி கர்ணன் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பித்தது. அதன்பின் உச்ச நீதிமன்றத்தில் அவர் ஆஜரானார்.
எனினும், அதன்பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 7 பேர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவும், அவர்கள் தனது முன்னிலையில் ஆஜராக வேண்டும் என்றும் அடுத்தடுத்து நீதிபதி கர்ணன் உத்தரவிட்டார்.
இந்நிலையில், மே 1-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது. ஆனால் கர்ணன் ஆஜராகவில்லை. இதை யடுத்து நீதிபதி கர்ணனுக்கு மனநல பரிசோதனை நடத்தி வரும் 8-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.