Published : 04 Feb 2023 09:00 AM
Last Updated : 04 Feb 2023 09:00 AM

திருமணமாகாத நிலையில் கருவுற்றதால் சிக்கல் - மாணவிக்கு உதவும் சட்டத்துறை அதிகாரிகள்; குழந்தையை தத்தெடுக்க ஏற்பாடு

புதுடெல்லி: ‘‘திருமணமாகாத பி.டெக் மாணவிக்கு பிறக்கப் போகும் குழந்தையை தத்தெடுக்க ஒரு தம்பதி விருப்பம் தெரிவித்துள்ளனர்’’ என்று உச்ச நீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்துள்ளார்.

பி.டெக் படிக்கும் 21 வயதுடைய மாணவி ஒருவர் கருவுற்றார். இது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து கல்லூரி விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின், தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். அவரது கருவைக் கலைக்க முயற்சித்தனர். இந்த விவகாரம் தெரிந்து வழக்கு பதிவானது. அந்த மாணவியை பரிசோதித்த எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் குழு, கருவை கலைத்தால் தாய், சேய் இரண்டுபேரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தது. அப்போது, மாணவிக்கு பிரசவம் நிகழும் வரை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டியை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

இதற்கிடையில், மாணவியின் சகோதரிக்கு திருமணம் நடைபெற்றது. அவரை தொடர்பு கொண்டு பிறக்கப் போகும் குழந்தையை தத்தெடுத்துக் கொள்கிறீர்களா என்று ஐஸ்வர்யா கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்துவிட்டார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு வித்தியாசமானது என்பதால், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பர்திவாலா ஆகியோர் தங்கள் சேம்பரில் அழைத்து விசாரித்தனர். அப்போது, மாணவி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அமித் மிஸ்ரா கூறும்போது, ‘‘மாணவியின் தந்தை கரோனா தொற்றால் இறந்துவிட்டார். தாயும் உடல்நலம் சரியில்லாமல் மோசமாக இருக்கிறார். எனவே, மாணவி தங்குவதற்கு உதவி செய்ய வேண்டும்’’ என்று வேண்டுகோள் வைத்தார்.

அப்போது கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி கூறும்போது, ‘‘மாணவியை பிரசவத்துக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கும் வரை, அவரை என் வீட்டிலேயே பாதுகாப்பாக தங்க வைத்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார். அதைக் கேட்ட நீதிபதிகள், ஐஸ்வர்யாவை மிகவும் பாராட்டினர்.

அதன்பின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிபதிகளிடம் கூறும்போது, ‘‘மாணவிக்குப் பிறக்கப் போகும் குழந்தையை தத்தெடுக்க ஒரு தம்பதி விருப்பம் தெரிவித்துள்ளனர். மத்திய தத்தெடுப்பு ஆணையத்தில் அவர்கள் பதிவு செய்து வைத்துள்ளனர். அவர்களுடைய பெயர், விவரங்களை நீதிமன்ற ஆவணங்களில் ரகசியமாக வைத்திருக்க வேண்டும். தத்தெடுக்கும் தம்பதியின் விவரங்களை மாணவிக்கும் தெரியப்படுத்த கூடாது. குழந்தையை தத்தெடுப்பதற்கான நடைமுறைகள் முடிந்தால் பிறக்கும் குழந்தைக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்’’ என்று வேண்டுகோள் வைத்தார்.

இதையடுத்து, நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு: மாணவியை எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்து பிரசவம் வரை நன்கு மருத்துவ உதவிகள் செய்ய வேண்டும். பிரசவத்துக்கு பிந்தைய உதவிகளையும் செய்யவேண்டும். அத்துடன் பிறக்கப் போகும் குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள அந்த இளம் தம்பதிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதற்கான நடைமுறைகளை மத்திய தத்தெடுப்பு ஆணையம் விரைந்து முடிக்க வேண்டும். தத்தெடுப்பவர்களின் விவரங்களை உச்ச நீதிமன்றத்தின் அனைத்து ஆவணங்களிலும் ரகசியமாக வைக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தோம். இந்த சிக்கலான விஷயத்தில் மனிதாபிமான முறையில் செயல்பட்ட கூடுதல் சொசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டை மனமார பாராட்டுகிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அரசியலமைப்பு சட்டப் பிரிவு 142-ன் கீழ் உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த பிரச்சினையில் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x