குல்பூஷன் ஜாதவ் உயிருடன்தான் இருக்கிறார்: உறுதி செய்தார் பாகிஸ்தான் தூதர்

குல்பூஷன் ஜாதவ் உயிருடன்தான் இருக்கிறார்: உறுதி செய்தார் பாகிஸ்தான் தூதர்
Updated on
1 min read

பாகிஸ்தானால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படையைச் சேர்ந்த முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் உயிருடன் இருப்பதாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பசித் உறுதிப்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக சதி செய்ததாகவும் கராச்சி குண்டுவெடிப்பில் தொடர்பு இருப்பதாகவும் குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

இதையடுத்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் மரண தண்டனை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்தது. இந்திய முறையீட்டில் நியாயம் இருப்பதால் மறு உத்தரவு வரும்வரை தண்டனையை நிறைவேற்றக்கூடாது என பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டது. மேலும், குல்பூஷன் ஜாதவை இந்திய அதிகாரிகள் சந்திக்க தூதரக ரீதியிலான அனுமதி வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

ஆனால், குல்பூஷன் ஜாதவ் எங்கு இருக்கிறார் எப்படி இருக்கிறார் என்பது இதுவரை தெரியாமல் இருந்தது.

இந்நிலையில், இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "குல்பூஷன் ஜாதவ் உயிருடன் இருக்கிறார் என்பதை என்னால் உறுதிபடத் தெரிவிக்க முடியும். பாசித் வழக்கு மிகவும் உணர்வுபூர்வமானது" எனக் கூறியுள்ளார்.

மேலும், குல்பூஷன் ஜாதவை சந்திக்க அனுமதி கோரி அவரது தாயார் தாக்கல் செய்த மனு இந்திய தூதரகம் மூலம் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலர் தெமினா ஜன்ஜுவாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் அப்துல் பாசித் கூறினார்.

குற்றச்சாட்டுக்கு மறுப்பு:

இந்திய ராணுவ வீரர்கள் பரம்ஜித் சிங், பிரேம் சாகர் தலையை பாகிஸ்தான் ராணுவம் துண்டித்ததாக இந்தியா முன்வைத்துள்ள குற்றச்சாட்டை பாசித் திட்டவட்டமாக மறுத்தார். பாகிஸ்தான் ராணுவம் இதுபோன்ற செயல்களில் எப்போதுமே ஈடுபட்டதில்லை என அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in