

மின்னணு வக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியவர்கள் அதை நிரூபிக்கும் வகையில் வலுவான ஆதாரத்தை இதுவரை கொடுக்காதது ஏன் என தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கேள்வி எழுப்பினார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி செய்யமுடியும், ஒரே கட்சிக்கு வாக்கு பதிவாகும் வகையில் மென்பொருளில் மாற்றம் செய்யமுடியும் என்றெல்லாம் ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் குற்றச்சாட்டை முன்வைத்தன.
இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவை சரிபார்க்கும் விவிபிஏடி கருவி ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்த செயல்முறை விளக்கம் இன்று (சனிக்கிழமை) அளிக்கப்பட்டது. தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த செயல்முறை விளக்கம் முடிந்தவுடன் பேசிய இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி, "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எவ்வித குளறுபடியும் செய்ய முடியாது. அவற்றின் இன்டர்னல் சர்க்யூட்டை மாற்றியமைப்பதற்கு எவ்வித வாய்ப்பும் இல்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் மிகவும் பாதுகாப்பானது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பிய அரசியல் கட்சிகள் இதுவரை தேர்தல் ஆணையத்தில் வலுவான ஆதாரம் ஏதும் அளிக்கவில்லை. இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் விவிபிஏடி கருவி பயன்படுத்தப்படும்" என்றார்.
அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டை அடுத்து கடந்த 12-ம் தேதி நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் குறை கூறும் அரசியல் கட்சிகள் அதை நிரூபிக்கலாம் எனத் தேர்தல் ஆணையம் சவால் விடுத்திருந்தது.
அன்றைய கூட்டத்தின்போது பெரும்பாலான கட்சிகள், வாக்களித்த நபர் அவருடைய வாக்கு பதிவானதை தெரிந்து கொள்ளும் விவிபிஏடி கருவி பயன்பாட்டுக் கொண்டுவரப்பட்டால் இனி எதிர்காலத்தில் அனைத்து தேர்தல்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தலாம் எனக் கூறியிருந்தன.
இந்நிலையில், இனிவரும் அனைத்துத் தேர்தல்களிலும் வாக்குப்பதிவை சரிபார்க்கும் விவிபிஏடி இயந்திரம் பயன்படுத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த 2009-ம் ஆண்டிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் குறை கூறிய கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் இதேபோன்றுதொரு சவாலை முன்வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.