நில மோசடி புகார்: லாலு பிரசாத் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை

நில மோசடி புகார்: லாலு பிரசாத் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை
Updated on
2 min read

ரூ.1,000 கோடி பினாமி நில மோசடி தொடர்பாக லாலுவின் மகள் மிசா பாரதி மற்றும் உறவினர் வீடுகள் உட்பட 22 இடங்களில் வருமான வரித் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.

பிஹாரில் ஐக்கிய ஜனதா தளமும், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளமும் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் நிதிஷ் குமார் முதல்வராகவும் லாலுவின் மகன் தேஜஸ்வி பிரசாத் துணை முதல்வராகவும் உள்ளார்.

லாலுவின் மகள் மிசா பாரதி 2014 மக்களவைத் தேர்தலின்போது பிஹாரின் பாடலிபுத்ரா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதைத் தொடர்ந்து கடந்த 2016 ஜூனில் அவர் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிஹார் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் மீது ஏற்கெனவே கால்நடை தீவன ஊழல் வழக்கு கள் நிலுவையில் உள்ளன. அவர் ரயில்வே அமைச்சராக இருந்தபோது அவரும், அவரது மகள், மகன்கள் ரூ.1,000 மதிப்பில் பினாமி நிலங்களை வாங்கி குவித்ததாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அண்மையில் குற்றம் சாட்டினார். பிஹார் மாநில பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடியும் இதே குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்நிலையில் லாலு பிரசாத் குடும்பத்தினரின் ரூ.1,000 கோடி பினாமி நில மோசடி தொடர்பாக டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குர்காவ்ன், ரேவரியில் உள்ள 22 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். லாலுவின் மகள் மிசா பாரதியின் டெல்லி வீடு, லாலுவின் உறவினர் வீடுகள் மற்றும் லாலுவோடு தொடர்புடைய தொழிலதிபர்களின் வீடு, அலுவல கங்களில் சோதனை நடத்தப்பட்டது.

வருமான வரித் துறையைச் சேர்ந்த 100 அலுவலர்கள் ஒரே நேரத்தில் இந்த சோதனைகளை நடத்தினர். பல மணி நேரம் நீடித்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டிருப்பதாக வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

லாலு குற்றச்சாட்டு

இதனிடையே லாலு பிரசாத், ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைக்க நான் முயற்சி செய்து வருவதால் எனது குரலை ஒடுக்க பாஜக சதி செய்கிறது. அந்த கட்சியால் என்னை எதுவும் செய்ய முடியாது. பாஜகவின் மிரட்டல்களுக்கு நான் ஒருபோதும் அஞ்சமாட்டேன்.

ஒருவேளை எனது குரலை ஒடுக்கினால் என்னைப்போல ஆயிரக்கணக்கான லாலுக்கள் உருவெடுப்பார்கள். எனது கடைசிமூச்சு உள்ளவரை மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராடுவேன். பாஜகவோடு சில புதியவர்கள் கூட்டணி அமைத்துள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பினாமி நில மோசடி தொடர்பாக டெல்லியில் வருமான வரித் துறை சோதனை நடத்தியபோது பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள லாலுவின் வீட்டில் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அப்போது கட்சியின் மூத்த தலைவர்களோடு லாலு தனியாக ஆலோசனை நடத்தினார்.

தனது ட்விட்டர் பதிவில், பாஜகவோடு கூட்டணி வைத்துள்ள புதியவர்களுக்கு வாழ்த்துகள் என்று லாலு குறிப்பிட்டுள்ளார். அந்த புதியவர்கள் யார், எதற்காக அவர்களுக்கு வாழ்த்து கூறினார் என்பது புதிராக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in