Published : 02 Feb 2023 09:56 PM
Last Updated : 02 Feb 2023 09:56 PM

'குழந்தை திருமணம் செய்த ஆயிரக்கணக்கானோர் கைதாவர்'- அசாம் முதல்வர் அதிரடி

அசாம் முதல்வர் ஹிமந்த சர்மா

குவாஹாட்டி: அசாமில் குழந்தைத் திருமணம் செய்த ஆயிரக்கணக்கான ஆண்கள் அடுத்த ஒரே வாரத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா அதிரடியாக அறிவித்துள்ளார். அசாம் மாநிலம் நகோன் மாவட்டத்திற்குச் சென்ற முதல்வர் இதனை தெரிவித்தார்.

"அடுத்த ஒரு வாரத்தில் மாநிலம் முழுவதும் குழந்தைத் திருமணங்கள் செய்து கொண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கைதாக உள்ளனர். அதேபோல் 14 வயதிற்கும் குறைவான சிறுமிகளை திருமணம் செய்தவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்" என்று அவர் கூறினார். அசாம் அரசு குழந்தைத் திருமணத்திற்கு எதிரான தீவிர பிரச்சாரத்தை, நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று முதல்வர், மாநிலத்தில் அதிக குழந்தைத் திருமணங்கள் பதிவாகும் இடங்களில் ஒன்றான நாகோன் மாவட்டத்திற்குச் சென்றார்.

அசாமின் நாகோன் மாவட்டத்தில் 42 சதவீதம் குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. குழந்தைத் திருமணங்களால் மிக இளம் வயதிலேயே கருத்தரிப்பதாலும் அதனால் பிரசவ தாய், சேய் மரணங்கள் அதிகரிப்பதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் குழந்தைத் திருமண தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்திய பின்னர் பார்பேட்டா மாவட்டத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் தீவிர கண்காணிப்பால் குழந்தைத் திருமணங்கள் தொடர்பாக 4004 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது குறித்து அசாம் முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் விரிவாக விவரித்துள்ளார். குழந்தைத் திருமணம் குறித்த புள்ளி விவரங்கள் முதல் தடுப்பு நடவடிக்கை வரை விவரித்துள்ளார்.

இந்தியாவில் பெண்ணின் திருமண வயது 18. ஆணின் திருமண வயது 21. இருந்தும் நாடு முழுவதும் குழந்தைத் திருமணங்கள் அதிகமாக உள்ளன. தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையின்படி, அசாமில் 15 வயது முதல் 19 வயது வரையிலான பெண்களில் 11.7 சதவீதம் பேர் கருவுற்றுவிடுகின்றனர். அசாமில் நிறைய மாவட்டங்களில் பெண்களுக்கு 18 வயதிற்கு முன்னதாக திருமணம் செய்வது மிக சாதாரணமான நிகழ்வாக உள்ளது. இந்நிலையில்தான் அசாம் அரசு குழந்தை திருமணங்கள் தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக்கியுள்ளது.

அசாமில் குழந்தை திருமணங்கள் மாவட்டவாரியாக:

  • துப்ரி - 50.8%
  • தெற்கு சல்மாரா - 44%
  • தரங் - 42%
  • நகோன் - 42%
  • கோல்பாரா - 41%
  • பொங்கைகான் - 41%
  • பார்பேட்டா - 40%
  • மொரிகேன் - 39%
  • டிமா ஹஸோ - 15%

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x