

அதானி விவகாரம்: நாடாளுமன்றத்தில் கடும் அமளி: அதானி குழும விவகாரத்தை எழுப்பி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் வியாழக்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றம் காலை 11 மணிக்கு கூடியதும், சபாநாயகர் ஓம் பிர்லா, ஜாம்பியாவில் இருந்து வந்திருந்த நாடாளுமன்ற குழுவை வரவேற்று கேள்வி நேரத்தைத் தொடங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதாக வெளியாகி இருக்கும் ஹின்டண்பர்க் அறிக்கை குறித்து விவாதிக்க வலியுறுத்தியும் எதிர்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த சபாநாயகர் ஓம் பிர்லா, அமைதி காக்கும்படி எதிர்கட்சி உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார். எனினும், எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியதால் அவை நடவடிக்கைளை பிற்பகல் 2 மணிவரை ஒத்தி வைப்பதாக அறிவித்தார். இரண்டு மணிக்கு அவை மீண்டும் கூடியதும் எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து, அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் இதே விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டன. இதனால் மாநிலங்களைவத் தலைவர் ஜக்தீப் தன்கர், முதலில் அவையை 2 மணி வரை ஒத்திவைத்தார். அவை மீண்டும் கூடியதும் மீண்டும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
அதானி விவகாரம்: நாடாளுமன்றக் குழு விசாரணை நடத்த கோரிக்கை: அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்றக் குழு அல்லது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மேற்பர்வையிலான குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், "சந்தை மதிப்பை இழந்துள்ள அதானி குழும நிறுவனங்களில் செய்யப்பட்டுள்ள எல்ஐசி, பொதுத்துறை வங்கிகள், நிதிநிறுவனங்களின் முதலீடு தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்கட்சிகள் தரப்பில் விதி எண் 267ன் கீழ் வணிக நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விவாகாரம் குறித்து விவாதம் நடத்த நாங்கள் விரும்பினோம். ஆனால், எங்களுடைய நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டது. எப்போதெல்லாம் முக்கியமான விஷயங்கள் குறித்து நாங்கள் விவாதிக்க விரும்புகிறோமோ அப்போதெல்லாம் எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
எல்ஐசி, எஸ்பிஐ மற்றும் பிற தேசிய வங்கிகளில் ஏழைகளின் பணமும் உள்ளது. அந்த பணம் குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது. அந்த முதலீடுகள் இழப்பைச் சந்திக்கும்போது அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம். எனவே, இந்த விவாகாரம் குறித்து நாடாளுமன்றக் குழு அல்லது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் மேற்பார்வைாயிலான குழு விசாரணை நடத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதனிடையே, அதானி குழும நிறுவனங்களுக்கு கடன் கொடுத்த வங்கிகளின் பாதிப்பு நிலவரத்தை ரிசர்வ் வங்கி ஆய்வுக்கு உட்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேலூரில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு: வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அதில், "தமிழ்நாடு அரசினுடைய நிதிநிலை அறிக்கை தாக்கல் அதன்பிறகு, துறை வாரியான மானியக் கோரிக்கைகள் அடுத்த சில மாதங்களில் தாக்கலாக இருக்கிறது. புதிய புதிய திட்டங்கள் ஏராளமாக சேர்ந்துவிடும். எனவே அதற்கு முன்னதாகவே, இதுவரை அறிவிக்கப்பட்டிருக்கக்கூடிய திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்திக் காட்டுங்கள்" என்று அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
இதனிடையே, வேலூர் மாவட்ட அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
தெலங்கானா முதல்வருக்கு நூதன சவால் விடுத்த ஷர்மிளா: ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலங்கானா முதல்வர் கே.எஸ்.சந்திரசேகர ராவுக்கு ஒரு நூதன சவால் விடுத்திருக்கிறார். இதுதொடர்பாக செய்தியாள்களை சந்தித்த அவர், "தெலங்கானா அமைதியாக இருப்பதாக சந்திரசேகர ராவ் கூறுகிறார். அவர் சொல்வது போல் மாநிலத்தில் பிரச்சினைகளே இல்லையென்றால் அவர் என்னுடன் யாத்திரை வரட்டும். பாத யாத்திரையின் போது எங்குமே எவ்வித பிரச்சினையுமே வரவில்லை என்றால் நான் அரசியலில் இருந்தே ஓய்வு பெற்று விடுகிறேன்.
ஆனால் அவர் சொல்வது பொய்யாக இருந்து மாநிலத்தில் பிரச்சினைகள் இருப்பது வெளிச்சத்துக்கு வந்தால் அவர் மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு பதவி விலக வேண்டும்" என்றார். மேலும் தனது சவாலை ஏற்றுக்கொள்ள ஒரு ஷூவை பரிசாக முதல்வர் சந்திரசேகர ராவுக்கு அனுப்பிவைப்பதாகக் கூறி ஷூ பெட்டி ஒன்றைத் திறந்து காடினார் ஷர்மிளா.
எருதுவிடும் விழா நடத்த அனுமதி அளிப்பதில் குளறுபடி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே எருதுவிடும் விழா நடத்த அனுமதி வழங்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி கலைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இபிஎஸ் மனுவிற்கு எதிராக ஓபிஎஸ் பதில் மனு: பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்படுள்ள இடையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பேனா நினைவுச் சின்னம்: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் புதிய உத்தரவு: சென்னை மெரினா கடலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி, ராம்குமார் ஆதித்யன் என்பவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பசுமைத் தீர்ப்பாய தென்மண்டல அமர்வின் நீதித் துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, ‘பத்திரிகைகளில் நான் படித்தது உண்மை என்றால் அது கருத்துக் கேட்புக் கூட்டமே இல்லை. எல்லா தரப்பினரையும் அழைத்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டதா?’ என்று கேள்வி எழுப்பினார். மேலும், இத்திட்டம் குறித்து விரிவான அறிக்கையை தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன் விடுதலை: ஹத்ராஸ் கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்றபோது கைது செய்யப்பட்ட கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் உத்தரப் பிரதேச மாநில சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தங்கம் விலை கடும் உயர்வு: சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்றம் இறக்கம் இருந்து வருகிறது. புதன்கிழமை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தங்கம், வெள்ளி, பிளாட்டினம் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சுங்க வரி உயர்த்தப்படுவதால் ஆபரண தங்கத்தின் விலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நகை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சென்னையில் வியாழக்கிழமை 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.115 அதிகரித்து ரூ.5,475 ஆகவும், சவரனுக்கு ரூ.920 அதிகரித்து ரூ.43,800 ஆகவும் விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.968 அதிகரித்து ரூ.45,992-க்கு விற்பனையானது. அதேபோல் வெள்ளியும் கிராமுக்கு ரூ.2.5 அதிகரித்து ரூ.77 ஆகவும், ஒரு கிலோவுக்கு ரூ.2,500 அதிகரித்து ரூ.77,300 ஆகவும் விற்பனையானது.
பிரிட்டனில் கடந்த சில மாதங்களாக விலைவாசி அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக இரு பிரதமர்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து, தற்போது ரிஷி சுனக் பிரதமராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் ஓய்வூதியம், சம்பள உயர்வு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள், ரயில் ஓட்டுநர்கள், விமான பணியாளர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக விரைவுரையாளர்கள், அரசு ஊழியர்கள் என 5 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை நிறுத்தத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.