தண்டனைச் சட்டத்தில் பெண் படுகொலை வகையை விரிவாக சேர்க்க மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தல்

மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. | கோப்புப் படம்
மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. | கோப்புப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்திய தண்டனைச் சட்டத்தில் பெண் படுகொலை வகையை விரிவாக சேர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதை நாடாளுமன்றத்தின் மக்களவையில் திமுக எம்.பியான தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தினார்.

இது குறித்து தென்சென்னை தொகுதி மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவை விதி எண் 377-ன் கீழ் இன்று பேசியதாவது: ''பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது அவர்களின் மனம், உடல் மற்றும் ஆன்மாவின் மீதான தாக்குதல் மட்டுமல்ல. மாறாக, அது ஆண் மேலாதிக்க உணர்வின் தவறான வெளிப்பாடாகும். அது ஒரு பெண்ணின் கழுத்தை நெரித்து சிதைக்கப்பட்ட சம்பவமாக இருந்தாலும் சரி, ஜார்க்கண்டில் நடந்தது போன்று 19 வயது பெண்ணை தீ வைத்து எரித்த சம்பவமாக இருந்தாலும் சரி மிகவும் தவறானது.

இதுபோன்ற பாலின வன்முறையின் கொடூரச் சம்பவங்கள் அடிக்கடி வெளிச்சத்துக்கு வருகின்றன. பெண் வன்(படு)கொலை என்று குறிப்பிடப்படும் இந்த வகையான வன்முறை குற்றவியல் நீதி அமைப்பில் தவிர்க்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி தேசிய குற்ற ஆவண காப்ப்பக பதிவிலும் தனியாக பதிவு செய்யப்படவில்லை. இந்திய தண்டனைச் சட்டமும் பெண் படுகொலை பற்றி விரிவான வரையறையை உள்ளடக்கவில்லை.

வரதட்சணை தொடர்பான மரணங்கள் அல்லது குடும்ப தகராறின் பின்னணியில் நடந்ததாக, தளர்வான அளவில் குறிப்பிடுகின்றன. இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக ஐ.நா. சபை உலகளாவிய அளவில் கணக்கெடுக்க அழைப்பு விடுத்த பிறகே, பிரச்சினையின் முக்கியத்துவம் அங்கீகரிக்கப்பட்டது. எனவே, இந்திய தண்டனைச் சட்டத்தில் பெண் படுகொலையை விரிவாக சேர்க்க தேவையான நடவடிக்கைகளைத் தொடங்கவும், பயனுள்ள வகையில் நம்பகமான தரவு சேகரிப்பை எளிதாக்கவும் அரசாங்கத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று வலியுறுத்தி உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in