“மத்திய பட்ஜெட்டில் மக்கள் நலன் இல்லை” - பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் விமர்சனம்

நிதிஷ் குமார் | கோப்புப் படம்
நிதிஷ் குமார் | கோப்புப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் மக்கள் நலன் இல்லை என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''இந்த பட்ஜெட்டில் மக்கள் நலன் பிரதிபலிக்கவில்லை. ஏழைகளுக்காக இந்த பட்ஜெட்டில் ஏதும் இல்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு கடந்த பட்ஜெட்டில் ரூ. 73 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டில் அது ரூ.60 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுவிட்டது. சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் கொடுக்கும் திட்டத்திற்கான நிதியும் குறைக்கப்பட்டுவிட்டது. இது கடும் கண்டனத்திற்கு உரியது'' என தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான், ''குடியரசு தின விழாவின்போது பஞ்சாப் புறக்கணிக்கப்பட்டது. தற்போது பட்ஜெட்டிலும் பஞ்சாப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், பாகிஸ்தானின் எல்லையை ஒட்டி இருப்பதால், எல்லை பாதுகாப்புப் படையை நவீனப்படுத்தவும், ட்ரோன் தாக்குதலை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் ஆயிரம் கோடி ரூபாய் கோரி இருந்தோம். ஆனால், இந்த பட்ஜெட்டில் பஞ்சாபின் கோரிக்கைகள் ஏற்கப்படவே இல்லை'' என தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், இந்த பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதற்காக பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருக்கு அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''புதுச்சேரிக்கான நிதி உதவி கடந்த பட்ஜெட்டில் ரூ. 1,724 கோடியாக இருந்தது. அது இந்த பட்ஜெட்டில் ரூ. 3,124 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், ஜிப்மர் மருத்துவமனை மேம்பாட்டுக்காக ரூ.1,490 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in