

புதுடெல்லி: 2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முழு ஆண்டுக்கான கடைசி பட்ஜெட் இதுவாகும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையின் சிறப்பு அம்சங்கள்:
மத்திய பட்ஜெட்டில் சப்தரிஷி முன்னுரிமைகள்: அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, கடைசி நபரையும் சென்றடைவது, முதலீடு மற்றும் கட்டமைப்பு, ஆற்றல் மற்றும் வெளிக்கொணர்தல், பசுமை வளர்ச்சி, இளைஞர் சக்தி, நிதித்துறை.
திருத்திய மதிப்பீடுகள்: கடன்கள் தவிர மொத்த வருவாய் ரூ.24.3 லட்சம் கோடி. இதில் நிகர வரி வருவாய் ரூ.20.9 லட்சம் கோடி. ஒட்டுமொத்த செலவினம் ரூ.41.9 லட்சம் கோடி. இதில் மூலதனச் செலவு ரூ.7.3 லட்சம் கோடி. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறை 6.4 சதவீதம்.
பட்ஜெட் மதிப்பீடுகள்: கடன்கள் தவிர மொத்த வருவாய் ரூ.27.2 லட்சம் கோடி. ஒட்டுமொத்த செலவினம் ரூ.45 லட்சம் கோடி. நிகர வரி வருவாய் ரூ.23.3 லட்சம் கோடி. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறை 5.9 சதவீதம். பங்குப் பத்திரங்கள் மூலம் கடன்கள் ரூ.11.8 லட்சம் கோடி. ஒட்டுமொத்த சந்தை கடன்கள் ரூ.15.4 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
நேரடி வரிகள்: வரி விதிப்பில் தொடர்ச்சியையும், நிலைத்தன்மையையும் நோக்கமாகக் கொண்டு நேரடி வரிகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. இணக்க சுமையை குறைக்கும் வகையில் வரி விதிப்பை எளிதாக்கி, சீரமைப்பதுடன், தொழில்முனைவு உணர்வை ஊக்குவிக்க மக்களுக்கு வரி நிவாரணம் வழங்கப்படுகிறது.