Published : 01 Feb 2023 12:18 PM
Last Updated : 01 Feb 2023 12:18 PM
பெங்களூரு: "எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவை ஒருபோதும் விமர்சிக்க மாட்டேன்" என கர்நாடக பாஜக அமைச்சர் கே.சி.நாராயண கவுடா கூறிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா அண்மையில், ''எனக்கு குடியரசுத் தலைவர் பதவியோ, பிரதமர் பதவியோ கொடுத்தாலும் கூட நான் பாஜகவில் சேரமாட்டேன். ஒருபோதும் ஆர்எஸ்எஸ் கொள்கையை ஏற்க மாட்டேன். எனது பிணம் கூட பாஜகவின் பக்கம் போகாது'' எனத் தெரிவித்தார். இதற்கு பாஜக தலைவர்களும் நிர்வாகிகளும் கடுமையாக எதிர்வினை ஆற்றினர்.
இதுகுறித்து கர்நாடக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கே.சி.நாராயண கவுடாவிடம் மண்டியாவில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கே.சி.நாராயண கவுடா, ''எனக்கு சித்தராமையா மீது மிகுந்த மரியாதை இருக்கிறது. அவரை ஒருபோதும் விமர்சிக்க மாட்டேன். அவர் முதல்வராக இருந்தபோது எனது தொகுதி வளர்ச்சிக்காக ரூ. 40 கோடி நிதி ஒதுக்கினார். அதனால் அவரை விமர்சிப்பது முறையாக இருக்காது'' என்றார்.
கே.சி.நாராயண கவுடாவின் இந்தக் கருத்து பாஜகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT