காஸ் குழாய் ஆய்வின்போது கசிவு கிராம மக்கள் தப்பி ஓட்டம்

காஸ் குழாய் ஆய்வின்போது கசிவு கிராம மக்கள் தப்பி ஓட்டம்
Updated on
1 min read

ஆந்திர மாநிலத்தில் எரிவாயு குழாய்களை கெயில் நிறுவன அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர். இதில் மீண்டும் காஸ் கசிவு ஏற்பட்டதால் கிராம மக்கள் பயந்து ஓட்டம் பிடித்தனர்.

கிழக்கு கோதாவரி மாவட்டம், நகரம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கெயில் நிறுவன எரிவாயு கசிந்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 22 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பைப்லைன் முழுவதையும் தணிக்கை செய்யுமாறு அரசு உத்தரவிட்டது. இதனால் கடந்த சில நாட்களாக கெயில் நிறுவன அதிகாரிகள் முழுமையாக தணிக்கை செய்து வருகின்றனர்.

திங்கள்கிழமை காலை, கிழக்கு கோதாவரி மாவட்டம், காக்கிநாடா அருகே உள்ள நரசாவரம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, திடீரென எரிவாயு கசிவு ஏற்பட்டது. மேலும் வெடி வெடிப்பது போன்ற பயங்கர சத்தமும் கேட்டது.

இதனால் பதறிப்போன கிராமத்தினர், தங்களது வீடுகளை விட்டு வெளியேறி, தாசில்தார் சிம்மாத்திரியிடம் முறையிட்டனர். உடனடியாக வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது கெயில் நிறுவன அதிகாரிகள், பைப்லைன்களை பழுது பார்ப்பதால், சிறிதளவு எரிவாயு கசிவு ஏற்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு எந்தவித ஆபத்துமில்லை என்று தெரிவித்தனர். ஆனால் முன்னறி விப்பு ஏதுமின்றி இதுபோன்ற நடவடிக்கைகளில் கெயில் நிறுவன அதிகாரிகள் ஈடுபட்டதை கிராம மக்கள் கண்டித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in