கர்நாடகாவில் இந்தி பாடல்களை பாடியதால் பாடகர் மீது பாட்டில் வீச்சு - கன்னட அமைப்பினர் 2 பேர் கைது

கர்நாடகாவில் இந்தி பாடல்களை பாடியதால் பாடகர் மீது பாட்டில் வீச்சு - கன்னட அமைப்பினர் 2 பேர் கைது
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள ஹம்பியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் இந்தி பாடல்களை மட்டும் பாடிய‌ பாடகர் கைலாஷ் கெர் மீது பாட்டில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஹம்பியில் விஜயநகரப் பேரரசின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் 3 நாட்கள் 'ஹம்பி உத்சவ்' நிகழ்ச்சி அம்மாநில அரசின் சார்பில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமை இரவு பிரபல பாடகர் கைலாஷ் கெர் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பாடகர் கைலாஷ் கெர் பாடும் போது இந்திப் பாடல்களை மட்டுமே பாடினார். அதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் கன்னட பாடல்களை பாடுமாறு கூச்சல் போட்டனர். இதனை பொருட்படுத்தாமல் கைலாஷ் கெர் இந்தி பாடல்களை தொடர்ந்து பாடினார். அப்போது கூட்டத்தில் இருந்து மர்ம நப‌ர் ஒருவர் தண்ணீர் பாட்டிலை அவர் மீது வீசினார். ஆனால் கைலாஷ் கெர் பாடலை நிறுத்தாமல் தொடர்ந்து பாடினார்.

இதையடுத்து மேடைக்கு வந்த ஹம்பி போலீஸார் தண்ணீர் பாட்டிலை அகற்றி, நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பை சேர்ந்த பிரதீப் (22), சுரேந்தர் (21) ஆகிய இருவரை கைது செய்தனர். போலீஸார் நடத்திய விசாரணையின்போது, கன்னட பாடல் பாடாததால் பாட்டில் வீசியதாக இருவரும் வாக்குமூலம் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in