பிபிசி ஆவண படத்துக்கு தடையை நீக்கக் கோரி வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் பிப்.6-ம் தேதி விசாரணை

பிபிசி ஆவண படத்துக்கு தடையை நீக்கக் கோரி வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் பிப்.6-ம் தேதி விசாரணை
Updated on
1 min read

புதுடெல்லி: பிபிசி ஆவண படத்துக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கக் கோரிய வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் பிப்.6-ம் தேதி விசாரணை நடத்தப்பட உள்ளது.

குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து ஊடகமான பிபிசி அண்மையில் ஆவண படத்தை வெளியிட்டது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் இந்த ஆவண படத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்த தடையை நீக்கக் கோரி மூத்த வழக்கறிஞர் எம்.எல். சர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், “பிபிசியின் ஆவண படத்துக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது அடிப்படை உரிமை மீறல் ஆகும். இந்த தடையை நீக்க வேண்டும். ஆவண படத்தில் பிபிசி வெளியிட்டிருக்கும் ஆதாரங்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியுள்ளார்.

இதே விவகாரம் தொடர்பாக ‘இந்து’ என்.ராம், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொயித்ரா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதில் கூறியிருப்பதாவது:

தகவல் தொழில்நுட்ப விதிகள்16-வது பிரிவின் கீழ் பிபிசி ஆவணபடத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணைபகிரங்கமாக வெளியிடப்பட வில்லை. பிபிசி ஆவண படத்துக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது சட்ட விரோதம் ஆகும். இதன்மூலம் மக்களின் அடிப்படை உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது.

பிபிசி ஆவண படம் குறித்து விவாதிக்கவும் மக்களின் கருத்துகளை அறியவும் ஊடகங்களுக்கு உரிமை இருக்கிறது. பிபிசி ஆவண படம் மீதான தடையை நீக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுக்களை உடனடியாக விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் மனுதாரர்கள் தரப்பில் நேற்று முறையிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி பிப்ரவரி 6-ம் தேதி மனுக்கள் மீது விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

மத்திய சட்ட அமைச்சர் கிரண்ரிஜுஜு ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், “நீதி கோரிஉச்ச நீதிமன்றத்தில் ஆயிரக்கணக்கானோர் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். தீர்ப்புக்காக அவர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் உச்ச நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையில் மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன’’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in