Last Updated : 31 Jan, 2023 04:59 AM

 

Published : 31 Jan 2023 04:59 AM
Last Updated : 31 Jan 2023 04:59 AM

முஸ்லிம்களுடன் மீண்டும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் சந்திப்பு - காசி, மதுரா மசூதிகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை

புதுடெல்லி: டெல்லியில் முக்கிய முஸ்லிம் தலைவர்களுடன் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கின்(ஆர்எஸ்எஸ்) தலைவர்கள் மீண்டும் சந்திப்பு நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது. அப்போது காசி, மதுரா மசூதிகள் உள்ளிட்ட பல விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

கடந்த ஜனவரி 14 -ம் தேதி இக்கூட்டம், டெல்லியின் முன்னாள் துணைநிலை ஆளுநரான நஜீப்ஜங் இல்லத்தில் நடைபெற்றது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாக்வத் அனுமதியின் பேரில் அதன் முக்கிய நிர்வாகிகளான இந்திரேஷ்குமார், ராம் லால் மற்றும் கிருஷ்ண கோபால் தாஸ் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

முஸ்லிம்கள் தரப்பில் ஜமாய்த்-எ-இஸ்லாமி ஹிந்த், ஜமாய்த்-எ-உலாமா ஹிந்தின் இரு பிரிவினர், அஜ்மீர் தர்கா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் என 10 பேர் இருந்தனர். இதில், சிறுபான்மையினருக்கு எதிரான பல்வேறு பிரச்சினைகள் குறித்து முஸ்லிம்கள் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.

இதேபோல், ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆளும் மத்திய அரசுக்கு ஆதரவளிப்பது, காசி மற்றும் மதுராவின் மசூதிகளை இந்துக்களுக்காக விட்டுக் கொடுப்பது உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டன.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் ஜமாய்த் எ இஸ்லாமி ஹிந்தின் தேசிய செயலாளரான சையத் தன்வீர் அகமது கூறியதாவது:

மிகவும் நல்ல சூழலில் நடைபெற்ற இந்த சந்திப்புகளை தொடர இருதரப்பினரும் விரும்பினர். முதல் சந்திப்பினால் கிடைக்க வேண்டிய நல்ல மாற்றத்துக்கு பதிலாக எழுந்த வெறுப்புணர்வு பேச்சுக்களால் நிலைமை மேலும் மோசமானது. இதனால், முதலில் இதுபோல் பேசுபவர்கள் கண்டிக்கப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு நாட்டில் மோசமடைந்துள்ளது.

ஆளும் பாஜகவின் மீது ஆர்எஸ்எஸ் கட்டுப்பாடு உள்ளதால் அதன் தலைவர்கள் அக்கட்சி, அரசுக்கு எடுத்துக்கூற வேண்டினோம். கும்பலாக அடித்துக் கொலை, புல்டோசர் அரசியல், அநாவசியமான கைதுகள் போன்றவற்றை தடுக்க வலியுறுத்த வேண்டும். இனப்படுகொலைக்கு குரல் தருவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

முஸ்லிம்களின் அரசியல் நடவடிக்கை மற்றும் கல்வியை மேம்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

இவற்றில் வெறுப்புணர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஆர்எஸ்எஸ் தரப்பில் ஏற்கப்பட்டன. தேசியவாதம், பசுவதை தடுப்பு, முத்தலாக் போன்றவற்றுக்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்கவும் கோரப்பட்டது.

பாபர் மசூதி விவகாரம் போன்ற பிரச்சினை இருப்பதாக காசி, மதுராவின் மசூதிகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இது கொடுக்கல், வாங்கலாகப் பேசும் பிரச்சினை அல்ல. சட்டப் பிரச்சினையான இது, ஆதாரங்களின் அடிப்படையிலானது. பாபர் மசூதிக்காகவும் நாம் நீதிமன்றக் கதவுகளை தட்டினோம், அதில் கிடைத்த பலனிலும் எங்களுக்கு திருப்தி இல்லை.

இப்பிரச்சினை ஓயும் என்ற உறுதியில்லை. இந்தப் பிரச்சினை தொடர்பாக நாங்களும் தயாராக வராததால் பேசவில்லை. இந்த சந்திப்பில் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படாததால், பத்திரிக்கையாளர்களை நாங்கள் சந்திக்க வில்லை. இதனால், ரகசியமாக இக்கூட்டம் நடந்ததாகக் கூறுவது தவறான கருத்து. இவ்வாறு சையத் தன்வீர் அகமது தெரிவித்தார்.

இதற்கு முன் கடந்த வருடம் ஆகஸ்டில் இதுபோன்ற முதல் கூட்டம் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் துடன் டெல்லியில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட நஜீப் ஜங், முன்னாள் மத்திய தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, மூத்த பத்திரிகையாளர் ஷாஹீத் சித்திக்கீ, பிரபல உணவு விடுதி அதிபர் சயீத் ஷெர்வாணி ஆகியோரும் இரண்டாவது கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டம், சுமார் மூன்று மணி நேரம் தொடர்ந்தது. இதன் அடுத்த கூட்டமும் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முஸ்லிம் வாக்குகள்: அடுத்த வருடம் நடைபெறும் மக்களவை தேர்தலில் முஸ்லிம் வாக்குகள் அனைத்தையும் பெற பாஜக தீவிரம் காட்டுகிறது. இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவின் கடந்த இரண்டு தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் குரல் கொடுத்திருந்தார். இதன் தாக்கமாக, 2014-க்கு பின் முதன்முறையாக இரண்டு முஸ்லிம் வேட்பாளர்களை தம் கட்சி சார்பில் திரிபுராவின் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வாய்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x