

'மாட்டிறைச்சி தடை, உலக வெப்ப மயமாதலைக் குறைக்க உதவும்' என்று ஓர் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க ஆய்வாளர்கள் இந்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர்.
மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்டது இந்தியா முழுவதும் மிகப்பெரிய அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினையாக மாறிய நிலையில், அமெரிக்க ஆய்வாளர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
கலிஃபோர்னியாவின் லோமா லிண்டா பல்கலைக்கழக ஆய்வாளர் ஹெலன் ஹார்வட் தலைமையில் ஆய்வு நடைபெற்றது. இதன் முடிவுகள் 'கிளைமேட் சேஞ்ச்' என்ற ஜர்னலில், 10 பக்க கட்டுரையாக வெளியாகியுள்ளன.
நான்கு அமெரிக்கப் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு மேற்கொண்ட ஆய்வின் விவரங்கள் பின்வருமாறு:
''மாட்டிறைச்சிக்குப் பதிலாக பீன்ஸை உண்பதன் மூலம் வெப்பமயமாதலுக்குக் காரணமான பசுமை இல்ல வாயுக்களைக் குறைக்க முடியும்.
மாட்டிறைச்சிக்கு பதிலாக பீன்ஸ்
அமெரிக்கர்கள் மாட்டிறைச்சிக்குப் பதிலாக பீன்ஸை உண்டால், 2020-ம் ஆண்டில் 50 முதல் 75 சதவீத பசுமை இல்ல வாயுக்களைக் குறைக்க முடியும். ஆட்டோமொபைல் துறையிலோ அல்லது உற்பத்தித் துறையிலோ எந்த புதிய உத்திகளையும் அறிமுகப்படுத்தாமலேயே இதைச் சாத்தியமாக்க முடியும்.
மாட்டிறைச்சி மற்றும் பீன்ஸ் ஆகியவற்றில் உள்ள கலோரிகள் மற்றும் புரோட்டின் அளவை வைத்து ஆய்வை மேற்கொண்டோம். இதில் மாட்டு வகைகள் அதிக பசுமை இல்ல வாயுக்களைக் கொண்ட உணவுகளை உற்பத்தி செய்பவையாக இருந்தன. அதே நேரத்தில் அவரை இனங்களான பட்டாணி, பீன்ஸ் போன்றவை மாட்டிறைச்சியைக் காட்டிலும் 40-ல் ஒரு பங்கு பசுமை இல்ல வாயுக்களையே உற்பத்தி செய்தன.
விலங்குகள் சார்ந்த உணவுகளைக் காட்டிலும், தாவரங்களை அடிப்படையாகக் கொண்ட உணவுகள் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
மின் உற்பத்தியிலும் புதிய உத்திகள்
அதே நேரத்தில் உலக வெப்ப மயமாதலில் முக்கியப் பங்கு வகிக்கும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் உள்ளிட்டவைகளிலும் புது உத்திகள் அறிமுகப்படுத்தப்பட்டு, மாட்டிறைச்சிக்கு பதிலாக பீன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டால், நிச்சயம் பசுமை இல்ல வாயுக்களைக் குறைக்கலாம்''.
இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
பசுமை இல்ல வாயுக்களைக் குறைக்க ஏராளமான உத்திகளை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளபோதும் உணவு முறைகள் மூலம் பருவ நிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும் என யாரும் இதுவரை கூறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.