Published : 30 Jan 2023 05:31 PM
Last Updated : 30 Jan 2023 05:31 PM

“ஜம்மு காஷ்மீரில் நடந்து செல்ல பாஜக தலைவர்கள் அஞ்சுவர்” - ஒற்றுமை யாத்திரை நிறைவு நிகழ்வில் ராகுல் காந்தி பேச்சு

ஸ்ரீநகரில் ராகுல் காந்தி | படம்: நிஸார் அகமது

ஸ்ரீநகர்: “ஜம்மு காஷ்மீரில் நடந்து செல்ல பாஜக தலைவர்கள் அஞ்சுவார்கள்” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்திய ஒற்றுமை யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சி ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இங்கு தேசிய கொடி ஏற்றப்பட்டதை அடுத்து ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: ''ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. குறிவைத்துக் கொல்வது, குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு மேம்பட்டுள்ளதாக பாஜக கூறுவது உண்மையல்ல. அது உண்மையாக இருந்திருக்குமானால், ஸ்ரீநகருக்கு வாகனத்தில் செல்லுங்கள்; நடந்து செல்லாதீர்கள் என்று போலீசார் என்னிடம் கூறி இருக்க மாட்டார்கள். பாதுகாப்பு நிலைமை மேம்பட்டிருப்பது உண்மை என்றால், ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு பாஜக தலைவர்கள் ஏன் நடைபயணம் மேற்கொள்ளவில்லை? உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏன் நடைபயணம் மேற்கொள்ளவில்லை?

பிரதமர் நரேந்திர மோடியும், அமித் ஷாவும், ஆர்எஸ்எஸ்ஸும் வன்முறையைப் பார்த்ததில்லை. நாங்கள் இங்கு 4 நாட்களாக நடைபயணம் மேற்கொண்டோம். என்னால் ஒன்றை உறுதியாக சொல்ல முடியும், இதைப் போன்ற ஒரு நடைபயணத்தை பாஜக தலைவர்களால் மேற்கொள்ள முடியாது. அவர்களை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பது அல்ல காரணம். உண்மையான காரணம் அவர்களிடம் இருக்கும் அச்சம்தான்.

போலீசார் கூறியும் நான் வாகனத்தில் செல்லவில்லை. நடந்துதான் வந்துள்ளேன். ஏனெனில் பயமின்மையை எனது குடும்பம் எனக்கு கற்றுத் தந்திருக்கிறது; மகாத்மா காந்தி கற்று தந்திருக்கிறார்.

நீங்கள் நடந்து சென்றால் உங்கள் மீது கையெறி குண்டுகளை வீசுவார்கள் என போலீசார் எச்சரித்தனர். என்னை வெறுப்பவர்களுக்கு ஏன் அந்த வாய்ப்பை கொடுக்கக்கூடாது என்று நான் நினைத்தேன். எனது வெள்ளை நிற டி ஷர்ட்டை அவர்கள் சிவப்பாக்கட்டுமே என்று கருதினேன். ஆனால், நான் எதிர்பார்த்ததுதான் நிகழ்ந்தது. ஜம்மு காஷ்மீர் மக்கள் கையெறி குண்டுகளை என் மீது வீசவில்லை. மாறாக அன்பைத்தான் அளித்துள்ளார்கள்.

வன்முறைக்குக் காரணமாக இருக்கும் பிரதமர் மோடி, அமித் ஷா, அஜித் தோவல், ஆர்எஸ்எஸ் ஆகியவர்களால் மக்களின் வலியை புரிந்து கொள்ள முடியாது. ஆனால், எங்களால் முடியும். இந்தியாவின் அடிப்படையை தகர்க்கும் சித்தாந்தத்திற்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய நேரம் இது'' என்றார் ராகுல் காந்தி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x