Published : 30 Jan 2023 08:50 AM
Last Updated : 30 Jan 2023 08:50 AM

2000 சதுர கி.மீ., சீன ஆக்கிரமிப்புக்குப் பின்னரும் அமைதி காக்கும் இந்தியாவின் போக்கு ஆபத்தானது: ராகுல் காந்தி

ராகுல் காந்தி | கோப்புப் படம்.

ஜம்மு: இந்திய மண்ணில் சீனர்களை நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். தொடர்ந்து இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் சீனா மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்காமல் எதுவுமே நடக்காமல் இருப்பதுபோல் அமைதி காப்பது ஆபத்தானது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், சீன ராணுவம் இதுவரை இந்தியாவிலிருந்து 2000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை ஆக்கிரமித்துள்ளது. ஆனால் இந்திய அரசோ சீனா நம்மிடமிருந்து எதையுமே எடுக்கவில்லை என்ற மனோபாவம் கொண்டுள்ளது. முன்னர் இந்தியாவின் கட்டுப்பாட்டிலிருந்த ரோந்துப் பகுதிகள் கூட இப்போது சீனாவிடம் சென்றுவிட்டது என்று லடாக் குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சீனா நம்மிடமிருந்து எந்த ஆக்கிரமிப்பும் செய்யவில்லை என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருப்பது மிகவும் ஆபத்தானது. இந்த மறுப்பு சீனர்களுக்கு இன்னும் மூர்க்கத்தனமாக ஆக்கிரமிப்பில் முன்னேறும் நம்பிக்கை தரும். மாறாக நம் எல்லையை ஆக்கிரமிக்கும் சீனாவுக்கு நாம் வலுவான பதிலடி கொடுக்க வேண்டும்.

ஜம்மு காஷ்மீர் தங்கள் ஆட்சியில் பாதுகாப்பாக இருக்கிறது என்று கூறும் அமித் ஷாவும் மற்ற பாஜக தலைவர்களும் ஜம்மு முதல் லால் சவுக் வரை ஒரு யாத்திரை நடை பயணமாக செல்ல வேண்டும் எனக் கோருகிறேன். திட்டமிட்ட படுகொலைகளும், குண்டு வெடிப்புகளும் ஜம்மு காஷ்மீரில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்றார்.

அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி: ராகுல் காந்தியின் சீன ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டுக்கு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக ஜெய்சங்கர், "எல்லையில் இருந்த 65 ரோந்துப் புள்ளிகளில் 26 ரோந்துப் புள்ளிகளை நாம் முதன்முதலில் 1962ல் தான் இழந்தோம். அப்போது ஜவஹர்லால் நேரு தான் பிரதமராக இருந்தார். சில நேரங்களில் பொய் என்று தெரிந்தே சில தகவல்களை காங்கிரஸா பரப்புகின்றனர். இந்த ஆக்கிரமிப்பு எல்லாம் இப்போது நடந்தது போலவே அவர்கள் கூறுகின்றனர். உண்மையில் சீன ஆக்கிரமிப்பு 1962லேயே தொடங்கிவிட்டது" என்றார்.

அடுத்தது என்ன? இந்திய ஒற்றுமை யாத்திரை இன்றுடன் நிறைவுபெறும் சூழலில் அடுத்தது என்னவென்று நிருபர்கள் கேள்வி எழுப்ப, சுமார் 4000 கிலோ மீட்டர் தொடர்ந்து பயணித்துவிட்ட சூழலில் நான் சற்று சோர்வாக இருக்கிறேன். ஓய்வுக்குப் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பேன் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x