Published : 30 Jan 2023 06:41 AM
Last Updated : 30 Jan 2023 06:41 AM
புதுடெல்லி: குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியாக முப்படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று கொட்டும் மழையில் நடந்தது.
நாட்டின் 74 வது குடியரசு தின விழா கொண்டாட்டம் ஜன.26-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்தாண்டு நடைபெற்ற குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் எல்-சிசி கலந்து கொண்டார்.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழாவில் பங்கேற்ற முப்படை வீரர்கள் அந்த விழாவுக்குப் பின் பாசறைக்கு திரும்பும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நேற்று கொட்டும் மழையில் டெல்லி விஜய் சவுக்கில் முப்படை வீரர்கள் பாசறைக்கு திரும்பும் அணிவகுப்பு வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராணுவம், கடற்படை, விமானப் படை, மத்திய ஆயுதப்படை (சிஏபிஎப்), மாநில காவல் துறையைச் சேர்ந்த வீரர்கள் இசை வாத்தியங்களை முழங்கி இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற பாசறை திரும்பும் நிகழ்ச்சியில் 1,000 ட்ரோன்கள் உள்ளடக்கிய கண்காட்சி நடைபெற்றது. இந்த ஆண்டு நடைபெறும் பாசறை திரும்பும் நிகழ்ச்சியில் முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 3,500 ட்ரோன்களை உள்ளடக்கிய மிகப்பெரிய ட்ரோன் கண்காட்சியை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், வானிலை காரணமாக இந்த ட்ரோன் கண்காட்சி நடத்தப்படவில்லை.
பார்வையாளர்கள் பரவசம்
பாசறை திரும்பும் நிகழ்ச்சி ‘‘அக்னிவீர்’’ இசையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, ‘‘கேதர் நாத்’’, “அல் மோரா’’, ‘‘சத்புரா ராணி’’, ‘‘சங்கம் துர்’’, “சத்புரா ராணி", ‘‘பாகீரதிள’’, “கொங்கன் சுந்தரி’’ போன்ற பரவசமான ட்யூன்களை டிரம்ஸ் இசைக்குழு இசைத்து பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
வழக்கம் போல ‘‘ஜாரே ஜஹான் சே அச்சா’’ பிரபலமான இசையுடன் பாசறை நிழச்சி நிறைவு பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT