Published : 30 Jan 2023 05:32 AM
Last Updated : 30 Jan 2023 05:32 AM

திறப்பு விழாவுக்கு வந்தபோது விபரீதம்; காவலர் துப்பாக்கியால் சுட்டதில் ஒடிசா அமைச்சர் உயிரிழப்பு: உயர்நிலை விசாரணைக்கு உத்தரவு

மார்பில் குண்டுகள் பாய்ந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட ஒடிசா மாநில சுகாதாரத் துறை அமைச்சர். (உள்படம்) அமைச்சர் நபா கிஷோர்.படம்: பிடிஐ

புவனேஸ்வர்: ஒடிசாவில் காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில், மார்பில் குண்டு பாய்ந்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் நபா கிஷோர் உயிரிழந்தார். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் நபா கிஷோர். இவர் பிரஜ்ராஜ்நகர் நகராட்சியின் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான புதிய அலுவலகங்களை திறந்து வைப்பதற்காக நேற்று காரில் வந்து இறங்கினார்.

அப்போது அருகில் இருந்த காவல் ஆய்வாளர் ஒருவர் திடீரென அமைச்சரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில், அமைச்சரின் மார்பில் 2 குண்டுகள் பாய்ந்தன.

ரத்த வெள்ளத்தில் விழுந்த அமைச்சர் நபா கிஷோர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மிகவும் அபாயகட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.எனினும், அவருக்கு உயிர்காக்கும் சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டன. தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, அமைச்சர் நபா கிஷோர் உயிரிழந்தார். அவருக்கு வயது 61.

அமைச்சர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் காந்தி சவுக் புறக்காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி துணை காவல் ஆய்வாளர் கோபால் தாஸ் என்பது விசாரணையில் தெரியவந்தது.

முதல்வர் பட்நாயக் இரங்கல்

ஒடிசா சுகாதாரத் துறை அமைச்சர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு முதல்வர் நவீன் பட்நாயக் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு மிகவும் அதிர்ச்சி தருவதாக தெரிவித்த முதல்வர், சம்பவம் குறித்து உயர்நிலை அளவில் விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், அமைச்சரை துப்பாக்கியால் சுட்ட உதவி துணைகாவல் ஆய்வாளர் கோபால் தாஸை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சுட்டுக் கொல்லப்பட்ட சுகாதாரத் துறை அமைச்சர் நபாகிஷோர் தாஸ், மாநிலத்திலேயே மிகவும் செல்வந்தரான எம்எல்ஏவாக வலம் வந்தவர். கடந்த ஆண்டில் அரசுக்கு அளித்த தகவலின்படி அவருக்கு ரூ.34 கோடி அளவுக்கு சொத்துகள் உள்ளன.

சுரங்க போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டு வந்த நபா, ஒடிசாவின் ஜர்சுகுடா தொகுதியில் இருந்து 3 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர்.

கடந்த 2009 மற்றும் 2014 தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு, 2019-ல் நடந்த தேர்தலில் நவீன் பட்நாயக்கின்பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சியில் சேர்ந்த அவர் 3-வது முறையாக எம்எல்ஏவாக தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x