

அரசியல் சட்ட ரீதியான தங்கள் உரிமை கோரல்களை அரசு குற்றமயப்படுத்தி வருவதாகவும் 2006-ம் ஆண்டு வன உரிமைகள் சட்டம் மிகக் கடுமையாக மீறப்படுவதாகவும் ஆதிவாசிக் குழுக்கள் குற்றம் சுமத்தியுள்ளது.
வியாழனன்று டெல்லியில் நடைபெற்ற தனிப்பட்ட மக்கள் தீர்ப்பாயத்தின் முன்பு வன உரிமைகள் சட்டத்தை அமல்படுத்துவதன் நிலவரம் குறித்த விசாரணையில் ஆதிவாசி இனக்குழுவினர் தெரிவித்தனர்.
மக்கள் தீர்ப்பாயம் மனித உரிமைகள் சட்ட வலைப்பின்னல் (Human Rights Law Network) மற்றும் சமுதாய வன உரிமைகள் ஆகிய அமைப்புகளினால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தாங்கள் வசிக்கும் வனத்தின் மீதான உரிமைகளை நிலைநாட்டும் வன உரிமைகள் சட்டத்தை அரசு அமல்படுத்துவதில் நாட்டம் காட்டவில்லை என்று ஆதிவாசிக் குழுக்கள் குற்றம்சாட்டின.
மகாராஷ்டிரா, உத்தராஞ்சல், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், சட்டீஸ்கர், ஒடிஷா, கேரளா, ராஜஸ்தான், தமிழ்நாடு, குஜராத், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்திருந்த பல்வேறு ஆதிவாசிக் குழுக்கள் இந்த சந்திப்பில் தங்கள் உரிமைகள் நிறைவேறுவது குறித்த குறைகளை தெரிவித்தனர்.
"நீர்-வனம்-நிலம் ஆகியவற்றிற்கான எங்கள் அரசியல் சட்ட உரிமைகளை அளியுங்கள்"
“ஏற்கெனவே எங்கள் வாழ்வு நிலையற்றதாக தத்தளித்து வருகிறது. தற்போது அரசுகளின் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களினால் எங்கள் வாழ்க்கை மேலும் சீரழிந்து வருகிறது. அரசு உண்மையில் எங்களுக்கு நல்லது செய்யவேண்டுமென்று நினைத்தால் எங்கள் வனம்-நீர்-நிலம் ஆகியவற்றுக்கான அரசியல் சட்ட உரிமைகளை எங்களுக்கு வழங்குவதாகவே இருக்க முடியும்” என்று மத்தியப் பிரதேசத்திலிருந்து வந்த பசந்த் தெம்கே என்ற ஆதிவாசி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, “இப்போதைக்கு எங்களால் எங்கள் நிலத்திற்கு பட்டா பெற முடியவில்லை. ஆண்டாண்டு காலமாக நாங்கள் வாழ்ந்து வந்த கிராமங்களிலிருந்து எங்களை வெளியேற்றி விட்டனர். அதாவது எங்கள் நிலம், “புரோஜெக்ட் டைகர்” என்பதற்கு சொந்தமாகிவிட்டதாக எங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது” என்றார் வேதனையுடன்.
தனியார் நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்களுடன் அரசும் கூட்டிணைந்து உரிமைகள் மீறலைத் தட்டிக் கேட்கும் ஆதிவாசிகள் மீது பொய்யான கிரிமினல் வழக்குகளை தொடுக்கின்றனர். எங்கள் கிராமங்களையும் பழம் விளையும் ஆயிரக்கணக்கான மரங்களையும் எரிக்கின்றனர், தட்டிக் கேட்டால் கிரிமினல் வழக்கு என்று தீர்ப்பாயத்திடம் ஏறக்குறைய அனைத்து ஆதிவாசிகளும் புகார் எழுப்பினர். மேலும் ஆதிவாசி நிலத்தில் சுரங்க திட்டத்திற்கு உரிமங்கள் வழங்கும் போது கிராமசபையினை ஆலோசிப்பதில்லை என்ற புகாரையும் அவர்கள் தெரிவித்தனர்.
வன உரிமைகள் சட்ட மீறல்கள் குறித்த நியூசிட்டிசன் அறிக்கையில், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் எதிர்ப்பு, அரசியல் விருப்புறுதியின்மை, ஆதிவாசி விவகார அமைச்சகத்தின் அலட்சியம் ஆகியவற்றை சுட்டிக்காட்டியுள்ளதோடு, இந்தக் காரணங்களினால்தான் வன உரிமைகள் சட்டம் அமல்படுத்த முடியாததற்குக் காரணம் என்று குறிப்பிட்டுள்ளது.
வன உரிமைகள் சட்டம் அமலாகி 10 ஆண்டுகள் ஆகியும் 85.6 மில்லியன் ஏக்கர்களில் 3% நிலங்கள் மட்டுமே இந்த சட்டத்தின் பார்வையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது, மீதி கொண்டுவரப்படவில்லை, இதுவே பலவிதமான சுரண்டல்களுக்கும் அராஜகங்களுக்கும் வழிவகுத்துள்ளதாக சமுதாய வன உரிமைகள் அமைப்பு அறிக்கை தெரிவிக்கிறது.