Published : 29 Jan 2023 07:12 AM
Last Updated : 29 Jan 2023 07:12 AM

ஒலியைவிட 5 மடங்கு வேகத்தில் செல்லும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை 3-வது முறை சோதனை

புதுடெல்லி: ஒலியைவிட 5 மடங்கு வேகத்தில் செல்லும், உள்நாட்டு ஹைபர்சோனிக் ஏவுகணையை இந்தியா நேற்று முன்தினம் சோதனை செய்தது.

இந்திய ராணுவத்திடம் ரேம்ஜெட் இன்ஜின் பொருத்தப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் ஏற்கெனவே உள்ளன. ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா தயாரித்த இந்த ஏவுகணை மேக் 2.8 வேகத்தில் செல்லக் கூடியது. இது செல்லும் தூரமும் 290 கி.மீ-லிருந்து தற்போது 450 கி.மீ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒலியைவிட 5 மடங்கு வேகத்தில் செல்லும் ஹைபர்சோனிக் ஏவுகணை தயாரிப்பில் இந்தியா, சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஈடுபட்டன. இந்தியாவின் முதல் ஹைபர்சோனிக் ஏவுகணையின் (எச்எஸ்டிடிவி) பரிசோதனை 2019-ம்ஆண்டு ஜூன் மாதம் தோல்வியில் முடிந்தது. இரண்டாவது சோதனை 2020செப்டம்பர் மாதம் மேற்கொள்ளப் பட்டது. இதில் ஸ்கிராம்ஜெட் இன்ஜின் பொருத்தப்பட்ட ஏவுகணை 22 முதல் 23 வினாடிகளுக்கு மேக்-6 வேகத்தில் பறந்தது.

இந்நிலையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஹைபர்சோனிக் ஏவகணையின் (எச்எஸ்டிடிவி) 3-வது சோதனை ஒடிசா மாநிலத்தில் அப்துல் கலாம் தீவில் நேற்று மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை வெற்றியா இல்லையாஎன்பதை டிஆர்டிஓ இன்னும் உறுதிசெய்யவில்லை. எனினும் ஹைபர்சோனிக் ஏவுகணையின் முதல் கட்ட பரிசோதனை வெற்றியடைந்ததாகவும், ஆனால், ஸ்கிராம் ஜெட் இன்ஜினின் செயல்பாடு குறித்து தரவுகளை விரிவாக ஆராய வேண்டியுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு(எப்ஏஎஸ்) கடந்தாண்டு வெளி யிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வழக்கமாக பாகிஸ்தானை குறி வைத்து அணு ஆயுதங்களை நவீனப்படுத்தி வந்த இந்தியா தற்போது சீனாவை குறிவைத்து அணு ஆயுதங்களை நவீனப்படுத்துவதுபோல் தெரிகிறது. அணு ஆயுதங்களை பயன்படுத்த இந்தியாவிடம் தற்போது 2 வகையான விமானங்கள், நிலத்தில்இருந்து ஏவுப்படும் 4 வகையான ஏவுகணைகள், கடலில் இருந்து ஏவப்படும் 2 வகையான ஏவுகணைகள் உள்ளன. இதற்காக இன்னும் 4 வகையான ஆயுதங்களை இந்தியா உருவாக்கி வருகிறது. இவை முடிவடையும் நிலையில் உள்ளன. ஆயுததயாரிப்புக்கான 700 கிலோ ப்ளூடோனியம் வரை இந்தியா உருவாக்கியுள் ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவற் றின் மூலம் 138 முதல் 213 அணு ஆயுதங்களை தயாரிக்கலாம். இந்தியாவிடம் தற்போது 160, பாகிஸ்தானிடம் 165, சீனாவிடம் 350, அமெரிக்காவிடம் 5,428, ரஷ்யாவிடம் 5,977 அணு ஆயுதங்கள் உள்ளன. இவ்வாறு எப்ஏஎஸ் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x