Published : 29 Jan 2023 07:29 AM
Last Updated : 29 Jan 2023 07:29 AM

இந்தியாவுக்கு 12 சிவிங்கி புலிகளை அனுப்புகிறது ஆப்பிரிக்கா

புதுடெல்லி: சிறுத்தை இனத்தில் லெபர்ட், ஜாகுவார், பூமா, சீட்டா (சிவிங்கி புலி) என பல்வேறு வகைகள் உள்ளன. இந்தியாவின் சத்தீஸ்கர் வனப்பகுதியில் கடந்த 1950-ம் ஆண்டில் சிவிங்கிபுலி தென்பட்டது. அதன்பிறகு கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவின் எந்த பகுதியிலும் சிவிங்கிபுலி கண்டுபிடிக்கப்படவில்லை.

இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பரில் ஆப்பிரிக்காவின் நமீபியா நாட்டில் இருந்து 8 சிவிங்கி புலிகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன. இதில் 5 பெண், 3 ஆண் சிவிங்கி புலிகள் அடங்கும்.

கடந்த செப்டம்பர் 17-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பிரதேசத்தின் குனோ-பல்புர் தேசிய பூங்காவில் 8 சிவிங்கி புலிகளை திறந்துவிட்டார். தற்போது குறிப்பிட்ட எல்லைக்குள் இவை வாழ்கின்றன. விரைவில் அடர்ந்த வனப்பகுதியில் சிவிங்கி புலிகளை விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் தென்னாப்பிரிக்காவில் இருந்து புதிதாக 12 சிவிங்கி புலிகளை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இதுதொடர்பாக இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையே அண்மையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தென்னாப்பிரிக்காவில் இருந்து ஆண்டுதோறும் 12 சிவிங்கி புலிகளை இந்தியாவுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

முதல்கட்டமாக பிப்ரவரி மாதத்தில் தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கி புலிகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட உள்ளன.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் மீண்டும் சிவிங்கி புலிகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க செய்ய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று தென்னாப்பிரிக்காவில் இருந்து சிவிங்கி புலிகளை அனுப்ப உள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வாழ்நாளில் 9 குட்டிகள்

இந்திய வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, “ஒரு பெண் சிவிங்கிபுலி தனது வாழ்நாளில் 9 குட்டிகள் வரை ஈனும். ஒரு குட்டி 20 மாதம் முதல் 24 மாதங்களில் பெரிய சிவிங்கி புலியாக வளரும். இவை ஆண்டு முழுவதும் இனப்பெருக்கத்தில் ஈடுபடும். அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் சிவிங்கி புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x