பவானி
பவானி

தேவகவுடாவின் மருமகள் ஹாசனில் போட்டி - குடும்பத்தினர் மோதலால் மஜதவில் சலசலப்பு

Published on

பெங்களூரு: கர்நாடகாவில் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 150 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் தனது மகன் நிகில் குமாரசாமி ராம்நகர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக குமாரசாமி அறிவித்துள்ளார்.

இதனிடையே தேவகவுடாவின் மூத்த மகனான ரேவண்ணாவின் மனைவி பவானி, ஹாசன் தொகுதியில் போட்டியிட இருப்பதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதற்கு அவரது கணவரும் முன்னாள் அமைச்சருமான‌ ரேவண்ணா, மகன்கள் ஹாசன் எம்.பி. பிரஜ்வல், ஹாசன் எம்எல்சி சுராஜ் ஆகியோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே வேளையில் தேவகவுடாவின் இளைய மகனான குமாரசாமி, பவானி ரேவண்ணாவுக்கு சீட் வழங்குவது குறித்து கட்சி மேலிடம் முடிவெடுக்கும் என்று கூறியிருப்பது மஜதவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பவானி ரேவண்ணா தானாகவே முந்திக்கொண்டு தனது தொகுதியை அறிவித்ததால் தேவகவுடா குடும்பத்தில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. தேவகவுடா குடும்பத்தினரே செல்வாக்கான தொகுதிகளில் களமிறங்க போட்டி போடுவதால் மஜத மூத்த நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in