

விமானம் பறக்கும்போது மனிதக் கழிவுகளைக் கொட்டும் விமான நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவிட்டுள்ளது.
தெற்கு டெல்லியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி சத்வந்த் சிங் தஹியா, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “எனது வீட்டு மொட்டை மாடி மீது அவ்வழியாக செல்லும் விமானத்திலிருந்து மனிதக் கழிவுகள் அடிக்கடி விழுகிறது. இது தூய்மை இந்தியா திட்டத்தை மீறும் செயல் ஆகும். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு, விமான நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறை பற்றி ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
விமான நிலையத்தில் வந்திறங்கும் விமானங்களில் கழிவறை சேமிப்பு தொட்டி காலி யாக உள்ளதா என்பதை டிஜிசிஏ திடீர் சோதனை செய்ய வேண்டும்.
ஒருவேளை கழிவறை தொட்டி காலியாக இருப்பது தெரியவந்தால், அதாவது விமானம் பறக்கும்போதே மனித கழிவை வெளியேற்றி இருப்பது தெரியவந்தால், அந்த விமான நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும்.
இது தொடர்பாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) அனைத்து விமான நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
இவ்வாறு விமான நிறுவனங் களிடமிருந்து அபராதமாக வசூ லிக்கப்படும் தொகை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக செலவிட வேண் டும். இது தொடர்பாக டிஜிசிஏ 3 மாதங்களுக்கு ஒரு முறை என்ஜிடிக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.