பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கு காலக்கெடு: குறித்த நேரத்தில் கட்டி முடிக்க மத்திய அரசு திட்டம்

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கு காலக்கெடு: குறித்த நேரத்தில் கட்டி முடிக்க மத்திய அரசு திட்டம்
Updated on
1 min read

கிராமப்புற ஏழைகளுக்கான பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட ஓர் ஆண்டு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இவற்றை கடந்த ஆட்சியை போல் அல்லாமல், குறித்த நேரத்தில் கட்டிமுடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

1985-86-ல் இந்திரா காந்தி பெயரில் கிராமப்புற ஏழை களுக்கான வீடு கட்டும் திட்டம், அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியால் அறிவிக்கப்பட்டது. மாநிலங்களுக்கு 75 சதவீத நிதியும் யூனியன் பிரதேசங்களுக்கு 90 சதவீத நிதியும் மத்திய அரசு அளிக்கும் என அறிவிக்கப் பட்டது.

மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் சார்பில் மேற் கொள்ளப்பட்ட இந்தத் திட்டம் குறிப்பிட்டக் காலத்துக்குள் முழுமை பெறாமல் போனது. சுமார் 25 சதவீத வீடுகள் குறித்த காலத்துக்குள் கட்டிமுடிக்கப் படவில்லை என மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் மீதான மத்திய கணக்குக் தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கையிலும் குறிப் பிடப்பட்டுள்ளது.

2022க்குள் அனைவருக்கும் வீடு

இந்தத் திட்டத்தில், பெயர் உட்பட சில மாறுதல்கள் செய்து கிராமப்புற ஏழைகளுக்கான பிரதமர் வீடு கட்டும் திட்டம் என்ற பெயரில் கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். வரும் 2020-22-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு அளிக்கப்படும் எனவும் திட்டமிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஏற்பட்ட கால அவகாசக் குறைப்பாட்டை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அதுபோன்ற ஒரு தவறு நடைபெறாமல் இருக்க உறுதி கொண்டுள்ளது இதன்படி, வரும் 2018-19-ம் ஆண்டுக்குள் ஒரு கோடி வீடுகள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை குறித்த காலக் கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என பிரதமர் மோடி உத்தர விட்டுள்ளார்.

இது குறித்து ‘தி இந்து’விடம் மத்திய ஊரக வளச்சி அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, “இத்திட்டத்தின் பயனாளிகள் ஏழை மக்கள் என்பதால் அவர்களுக்கு வீடுகள் கட்டித்தர காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்கள் ஓர் ஆண்டுக்குள் வீடுகளைக் கட்டிமுடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப் பணியை நான்கு கட்டங்களாக பிரித்து, அவற்றுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ் வொரு வீட்டையும் கட்டிமுடித்த பின்பே அதற்கான கட்டுமானத் தொகை ஒப்பந்ததாரர்களுக்கு கிடைக்கும் வகையிலும் ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

இந்திரா வீடு கட்டும் திட்டத்தின்படி 20 சதுர கெஜம் என இருந்த வீட்டின் அளவு தற்போது 25 சதுர கெஜம் (257 சதுர அடி) ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 1 கோடி குடும்பங்களுக்கு 2018-19-ல் வீடுகள் கட்டி முடிக்கப்படும்போது அடுத்த மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலை உள்ளது. திட்டத்தின் முழுப்பலனைப் பெறுவதற்காகவே பிரதமர் மோடி இதற்கான காலக்கெடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in