

பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் முதல் ரயில்வே துறைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. வரும் நிதியாண்டில் மத்திய பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் ரயில் பயண பாதுகாப்பை உறுதி செய்ய ரூ.1,19,183 கோடி நிதி தேவை என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு கடிதம் எழுதினார். இந்த நிதியின் மூலம் தண்டவாளங்கள், சிக்னல்களை மேம்படுத்தவும் ஆளில்லா ரயில்வே கேட்டுகளில் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்கவும் ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டிருந்தது.
ரயில்வே அமைச்சரின் கோரிக்கையை பரிசீலித்த நிதியமைச்சகம் 25 சதவீத நிதியை மட்டும் ஒதுக்க முன்வந்துள்ளது. மீதமுள்ள 75 சதவீத தொகையை செஸ் வரி மூலம் திரட்டுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக விரைவில் ரயில் கட்டணம் உயர்த்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுதொடர்பாக ரயில்வே வட்டாரங்கள் கூறியிருப்பதாவது:
தற்போதைய நிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவு கணிசமாக குறைந்துள்ளது. இந்த நேரத்தில் ரயில் கட்டணத்தை உயர்த்த அமைச்சர் சுரேஷ் பிரபு விரும்பவில்லை. ஆனால் ரயில் பயண பாதுகாப்புக்கு தேவையான நிதியை மத்திய நிதியமைச்சகம் ஒதுக்க மறுப்பதால் வேறுவழியின்றி ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.
அதன்படி ஸ்லீப்பர், 2-ம் வகுப்பு, 3-ம் வகுப்பு ஏசி ஆகியவற்றுக்கு கூடுதல் செஸ் கட்டணம் விதிக்கப்படும். 2-ம் வகுப்பு ஏசி, முதல் வகுப்பு ஏசி ஆகியவற்றுக்கு செஸ் வரி சற்று குறைவாக இருக்கும். கட்டண உயர்வு தொடர்பாக ரயில்வே துறை விரைவில் முடிவு எடுக்கும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.