உ.பி. கலவரம்: தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

உ.பி. கலவரம்:  தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒருவர் கைது
Updated on
1 min read

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நடந்த கலவரத்தில் தொடர்புடையவர் எனக் கருதப்படும் முகரம் அலி பப்பு என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

உத்தரப் பிரதேசத்தின் சஹரான்பூரில் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதியில் சீக்கியர்களின் குருத்வாரா உள்ளது. இதன் அருகில் உள்ள காலி இடம் தங்களுக்குச் சொந்தமானது என்று குருத்வாரா நிர்வாகிகளும், வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்று மற்றொரு தரப்பினரும் உரிமை கொண்டாடி வருகின்றனர்.

சர்ச்சைக்குரிய இடத்தில் குருத்வாரா நிர்வாகிகள் சுவர் எழுப்ப முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே சனிக்கிழமை நடந்த மோதல் இரு தரப்பிலும் கலவரம் வெடித்தது. இதில் 3 பேர் பலியாகினர். போலீஸார் உட்பட 33-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பல கடைகள் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டன. இதனைத் தொடர்ந்து ரம்ஜான் தினம் வரை அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய பகுதியில் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. வன்முறைச் சம்பவம் தொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இந்த கலவரம் தொடர்பாக, முக்கியக் குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் முகரம் அலி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரு தரப்பிலும் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது கலவரத்தை தூண்டிவிட கற்களை வீசியது, கடைகளை அடித்து நொறூக்கியது என பல்வேறு குற்றங்கள் விவரிக்கப்பட்டு, அவர் மீது அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அவர் கும்பலை கூட்டி, கலவரத்தை தூண்டியதாகவும், அதற்கான ஆதாரங்கள் சம்பவ பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளதாகவும், இதன் அடிப்படையில் தகுந்த ஆதாரங்களை கொண்டு முகரம் அலி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் பாண்டி தெரிவித்துள்ளார்.

வன்முறைச் சம்பவம் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் கலவரம் குறித்த தீவிர விசாரணை தொடர்ந்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in