Published : 27 Jan 2023 04:19 AM
Last Updated : 27 Jan 2023 04:19 AM

74-வது குடியரசு தின விழா கோலாகலம் - தலைநகர் டெல்லியில் கண்கவர் அணிவகுப்பு; ஜனாதிபதி தேசியக் கொடியேற்றினார்

டெல்லியில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்ற குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, எகிப்து அதிபர் எல்-சிசி, குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி.படம்: பிடிஐ

புதுடெல்லி/சென்னை: நாட்டின் 74-வது குடியரசு தின விழா தலைநகர் டெல்லியில் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்குமாறு, எகிப்து அதிபர் அப்தெல் படாக் எல்-சிசி அழைக்கப்பட்டிருந்தார். அவரை குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து, ராணுவ அணிவகுப்பு நடைபெறும் கடமை பாதைக்கு, குதிரைப்படை வீரர்கள் புடைசூழ குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது வாகனத்தில் அழைத்து வந்தார். குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற பின்னர் திரவுபதி முர்மு கலந்துகொள்ளும் முதல் குடியரசு தின விழா இதுவாகும்.

இருவரையும் பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகள் ஆகியோர் வரவேற்று, விழா மேடைக்கு அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியேற்றிவைத்தார். அப்போது 21 பீரங்கி குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

பின்னர், கமாண்டர் லெப். ஜெனரல் திராஜ் சேத் தலைமையில் ராணுவ அணிவகுப்பு தொடங்கியது. கடமை பாதையில், உள்நாட்டுத் தயாரிப்பான ஆகாஷ் ஏவுகணைகளை ஏந்திய ராணுவ வாகனங்கள், அர்ஜுன் பீரங்கி வாகனங்களுடன், பாதுகாப்புப் படையினர் அணிவகுத்து வந்தனர். முதல் அணியாக எகிப்து நாட்டின் ராணுவ வீரர்கள் 144 பேர், கர்னல் மகமூத் முகமது அப்தெல் ஃபதா எல் கரசாவி தலைமையில் அணிவகுத்து வந்தனர். இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பில், எகிப்து படைப் பிரிவு பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். விழாவில், குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அலங்கார ஊர்திகள்: அணிவகுப்பில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் அலங்கார ஊர்திகள், மத்திய அரசுத் துறைகளின் 6 அலங்கார ஊர்திகள் பங்கேற்றன.

தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தியில், தஞ்சை பெரிய கோயில் கோபுரம், நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. கல்வி, அறிவாற்றல், கலை, போர், வேளாண்மை ஆகியவற்றில் பெண்கள் வலிமையோடுத் திகழ்கிறார்கள் என்பதைக் குறிக்கும் வகையில் தமிழ்நாடு ஊர்தி வடிவமைக்கப்பட்டிருந்தது. முகப்பில் அவ்வையார் கம்பீரமாக தோற்றமளித்தார். இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி, பரதநாட்டியக் கலைஞர் தஞ்சாவூர் பால சரஸ்வதி, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி, விவசாயப் பணி மேற்கொள்ளும் 107 வயது மூதாட்டி பாப்பம்மாள் ஆகியோரது சிலைகளும் இடம் பெற்றிருந்தன. ஊர்தியின் முகப்பில் தமிழ்ப் பெண்களின் வீரத்தைப் போற்றும் வகையில் வேலு நாச்சியார், குதிரை மீது அமர்ந்து போர்புரியும் காட்சி தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

அணிவகுப்பின் இறுதி நிகழ்ச்சியாக, விமானப்படையின் போர் விமானங்கள் சாகசங்கள் நிகழ்த்தி, பார்வையாளர்களைக் கவர்ந்தன. இந்திய விமானப்படையின் 45 விமானங்கள் அணிவகுப்பில் பங்கேற்றன.

ஆளுநர் கொடியேற்றினார்: சென்னை மெரினா கடற்கரையில் நடப்பாண்டு முதல்முறையாக உழைப்பாளர் சிலை பகுதியில் குடியரசு தின விழா நடைபெற்றது. வழக்கமாக விழா நடைபெறும் காந்தி சிலை பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால், இந்த முறை இடம் மாற்றப்பட்டது.

காலை 7.50 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினும், 7.52 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியும் அங்கு வந்தனர். தலைமைச் செயலர் வெ.இறையன்பு, ஆளுநருக்கு முப்படை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளை அறிமுகம் செய்துவைத்தார். காலை 8 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

அப்போது விமானப்படை ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டன. தொடர்ந்து, ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோரக் காவல்படை, முன்னாள் ராணுவத்தினர், மத்திய ரிசர்வ் போலீஸ், மத்திய தொழில் பாதுகாப்புப் பிரிவு, ரயில்வே காவல் படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படைப் பிரிவு, பேரிடர் நிவாரணப் படை, கடலோரப் பாதுகாப்புக் குழு, தமிழ்நாடு கமாண்டோ படை, நீலகிரி படை, குதிரைப்படை, வனம், சிறை, தீயணைப்புத் துறைகள், ஊர்க்காவல்படை, தேசிய மாணவர் படை, நாட்டுநலப்பணித் திட்டம், தமிழ்நாடு சாலைப் பாதுகாப்பு, சிற்பி படையினர் மற்றும் பல்வேறு பள்ளி அணிகளின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக் கொண்டார். இசைக் குழு மற்றும் கடற்படை, வான்படை, கடலோரக் காவல் படையின் ஊர்திகளும் அணிவகுப்பில் பங்கேற்றன.

தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், காந்தியடிகள் காவல் பதக்கம், சிறந்த காவல் நிலையங்களுக்கான முதல்வர் விருது, திருத்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தைக் கடைப்பிடித்து, அதிக உற்பத்தி செய்யும் விவசாயிக்கான சிறப்பு விருது ஆகியவற்றை வழங்கினார். இதையடுத்து, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள், தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் ராஜஸ்தானின் கல்பேலியா நடனம், மகாராஷ்டிராவின் கோலி நடனம், அசாமின் பகுரும்பா நடனம், செய்தித் துறை சார்பில் சிலம்பாட்டம், கரகாட்டம், நையாண்டி மேளம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தமிழ்நாடு வாழ்க!: சென்னையில் நடைபெற்ற விழாவில், அலங்கார வாகனங்களின் அணிவகுப்பில் செய்தி-மக்கள் தொடர்புத் துறை சார்பில் ‘தமிழ்நாடு வாழ்க’ என்ற முகப்பு வாசகத்துடன் கூடிய வாகனம் முதலில் வந்தது.

தொடர்ந்து, அரசின் திட்டங்களை விளக்கும் வாகனம், காவல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு, கூட்டுறவு மற்றும் உணவு, ஊரக வளர்ச்சி, வேளாண்மை, பள்ளிக்கல்வி, சுகாதாரம், கைத்தறி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், சுற்றுலா, சமூக நலம்,வீட்டுவசதி, வனம், அறநிலையங்கள், தீயணைப்பு உள்ளிட்ட துறைகள் மற்றும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் வாகனங்கள் அணி வகுப்பில் பங்கேற்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x