உருவானது வர்தா புயல்: ஆந்திர கடலோர பகுதிகளில் கனமழை வாய்ப்பு

உருவானது வர்தா புயல்: ஆந்திர கடலோர பகுதிகளில் கனமழை வாய்ப்பு
Updated on
1 min read

தென் கிழக்கு வங்கக் கடலில் புயல் உருவானது. 'வர்தா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் காரணமாக, ஆந்திர கடலோரப் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் கிழக்கு வங்கக் கடலில், விசாகப்பட்டினத்திலிருந்து 1,210 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி, பின்னர் புயலாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணி நிலவரப்படி, தென் கிழக்கு வங்கக் கடலில், விசாகப்பட்டினத்திலிருந்து 1,060 கிலோ மீட்டர் தூரத்தில் 'வர்தா' புயல் மையம் கொண்டிருப்பதாக, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் புயல் மேலும் வடமேற்கு திசையை நோக்கி நகர்வதால், கடும் புயலாக மாறி, அடுத்த 4 நாட்களுக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் நிலை மற்றும் நகரும் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தென் தமிழக கடலோரப் பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில், வர்தா புயலின் தாக்கத்தால் கடலோரப் பகுதிகள் உள்ளிட்ட வடதமிழகத்தில் மழை வாய்ப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரத்தில் வலுவிழந்த நிலையில் கரையை கடந்த புயலுக்கு 'நடா' (பெருந்தன்மை) என்று ஓமன் நாடு பெயர் சூட்டியிருந்தது. தற்போது உருவாகியுள்ள புயலுக்கு உருது மொழியில் 'வர்தா' என பாகிஸ்தான் நாடு பெயர் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in