

முல்லை பெரியாறு அணையை கண்காணிக்க துணைக் குழுவுக்கு 2 தமிழக பிரதிநிதிகளை நியமித்து புதன்கிழமை தமிழக அரசு உத்தரவிட்டது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142அடியாக உயர்த்திக் கொள்ளவும், அணையைக் கண் காணிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து மத்திய அரசு சார்பில் மத்திய நீர்வள ஆணைய தலைமைப் பொறியாளர் எல்.ஏ.வி.நாதன், தமிழக அரசு சார்பில் பொதுப் பணித் துறை தலைமை பொறியாளர் எம்.சாய்குமார், கேரள அரசு சார்பில் நீர்பாசனத் துறை கூடுதல் செயலர் வி.ஜே.குரியன் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் கடந்த 17-ம் தேதி அணையைப் பார்வையிட்டனர். அணை பாதுகாக்கவும் கண்காணிக் கவும் மத்திய நீர்வளத் துறை அதிகாரி தலைமையில் தமிழகம் மற்றும் கேரளத்தில் இருந்து தலா இரு பிரதிநிதிகள் அடங்கிய துணைக் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 5 நாளுக்கு முன் கேரள அரசு சார்பில் அம்மாநில நீர்ப்பாசனத் துறை செயற்பொறியாளர் ஜார்ஜ்டேனியல், உதவிப் பொறியாளர் பிரசித் ஆகியோரை கேரள அரசு நியமித்தது.
இதற்கிடையில் தமிழகப் பிரதிநிதிகளாக முல்லை பெரியாறு அணையின் செயற்பொறியாளர் மாதவன், உதவிப் பொறியாளர் ரமேஷ் ஆகியோரை நியமிக்கக்கோரி தமிழ்நாடு பொதுப் பணித் துறை மதுரை கண்காணிப்பாளர் ராஜேஷ் தமிழக அரசுக்கு பரிந்துரைத்திருந்தார். இதையேற்று மாதவன், ரமேஷ் ஆகியோரை தமிழக பிரதிநிதிகளாக நியமித்து தமிழக அரசு புதன்கிழமை உத்தரவிட்டது.