

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் சனிக்கிழமை தாக்குதல் நடத்தியதில் 3 வீரர்கள் பலியாயினர். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ராணுவ வாகனம் ஒன்று வீரர்களை ஏற்றிக்கொண்டு ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. புல்வாமா மாவட்டம் பாம்பூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த அந்த வாகனத்தை நோக்கி, மோட்டார் சைக்கிளில் வந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடினர்.
அப்பகுதியில் பொதுமக்கள் அதிக அளவில் இருந்ததால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் பதில் தாக்குதல் நடத்தவில்லை. எனினும், அப்பகுதியை சுற்றிவளைத்து தப்பி ஓடிய தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் 3 வீரர்கள் பலியாயினர். மேலும் 2 பேர் காயமடைந்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.