

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் விமானப் படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகிக்கு ஜாமீன் வழங்கி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இந்த வழக்கில் தியாகி, இவரது உறவினர் சஞ்சீவ் தியாகி, வழக்கறிஞர் கவுதம் கேத்தான் ஆகியோரை சிபிஐ கைது செய்தது. அவர்களிடம் 3 நாட்கள் விசாரணை நடத்த சிபிஐ.க்கு கடந்த 14-ம் தேதி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி மூன்று பேரிடம் சிபிஐ தீவிர விசாரணை நடத்தியது.
மூன்று நாள் அனுமதி முடிந்த பிறகு, தியாகி உட்பட 3 பேரிடமும் விசாரணை நடத்த சிபிஐ கால நீட்டிப்பு கேட்கவில்லை.
இதையடுத்து 3 பேரையும் வரும் 30-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சிறப்பு நீதிமன்ற நீதிபதி அர்விந்த் குமார் டிசம்பர் 17-ல் உத்தரவிட்டார்.
இதனிடையே, ஜாமீன் கோரி தியாகி மனு தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கியது.
முன்னதாக, காங்கிரஸ் ஆட்சியின்போது, விவிஐபி.க்கள் செல்வதற்காக இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டன. இதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாகப் புகார் எழுந்தது.
இதுகுறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஊழலில் விமானப் படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகி, இவருடைய உறவினர்கள் மற்றும் உயரதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.