

நக்சலைட்டுகள் பயன்படுத்தும் ஐஇடி வகை குண்டுகள் மூலம், காஷ்மீரில் பாதுகாப்புப் படையி னரைக் கொல்ல சதி நடந்துள்ளது. இந்த வகை குண்டுகள் காஷ்மீரில் முதல்முறையாக பயன்படுத்தப் பட்டுள்ளதால் பாதுகாப்புப் படை யினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உட்பட பல மாநிலங்களில் அரசுக்கு எதிராக நக்சலைட்டுகள் பயங்கர வன்முறைகளில் ஈடுபட்டு வரு கின்றனர். அவர்களை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிரடிப் படையினர், போலீஸார், பாதுகாப்புப் படையினர் மீது திடீர் திடீரென பல வகைகளில் தாக்குதல் நடத்துகின்றனர். குறிப்பாக சாலையோரங்களில், வாகனங்கள் செல்லும் வழிகளில் ஐஇடி எனப்படும் ஒருவகை குண்டுகளை புதைத்து வைக்கின்றனர்.
நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள், வாகனங்களில் செல்லும் வீரர்கள் இதுபோன்ற ஐஇடி குண்டுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அது போன்ற குண்டுகளை காஷ்மீரில் தீவிரவாதிகள் பயன்படுத்திய தில்லை. முதல்முறையாக நக்சல்களின் பாணியில் காஷ்மீரில் ஐஇடி வகை குண்டுகளைப் பயன் படுத்தி பாதுகாப்புப் படையின ரைக் கொல்ல முயற்சி நடந் துள்ளது. கடந்த 4-ம் தேதி ஜீப்பில் சென்ற போலீஸார், ஒயர்கள் பொருத்தப்பட்ட ஐஇடி குண்டில் சிக்கியுள்ளனர். இதில் ஜீப் சின்னா பின்னமாகி உள்ளது. போலீஸார் படுகாயம் அடைந்துள்ளனர்.
இது மிகப்பெரிய பிரச்சினை என்பதால், பல மாநிலங்களில் நக்சல்கள் ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய ரிசர்வ் படை (சிஆர்பிஎப்) அதிகாரிகளின் உதவியை கோரியுள்ளனர். அதன்படி, ஐஇடி வகை குண்டுகளை கண்டுபிடிப்பதிலும் அவற்றை செயலிழக்க செய்வதிலும் நிபுணத்துவம் பெற்ற சிஆர்பிஎப் வீரர்கள் காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் காஷ்மீரில் பாது காப்புப் பணியில் ஈடுபட்டுள்ள எல்லைப் பாதுகாப்புப் படையினர், ஜம்மு காஷ்மீர் போலீஸ் மற்றும் வேறு சில பாதுகாப்புப் படை வீரர்களுக்கு ஐஇடி வகை குண்டுகளை எப்படி சமாளிப்பது என்பது குறித்து தீவிர பயிற்சி அளிக்க உள்ளனர்.
இதுகுறித்து சிஆர்பிஎப் டைரக்டர் ஜெனரல் கே.துர்கா பிரசாத் நேற்று செய்தியாளர் களிடம் கூறுகையில், ‘‘கடந்த பல ஆண்டுகளாக தீவிர வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீரில் முதல் முறையாக நக்சலைட்டுகளின் பாணியில் ஐஇடி வகை குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட் டிருந்தது கண்டுபிடிக்கப்பட் டுள்ளது.
வயர் மூலம் ஐஇடி குண்டுகளை இணைத்து தாக்குதல் நடத்தும் தொழில்நுட்பம் இதற்கு முன்பு காஷ்மீரில் கேள்விப்பட்டதில்லை. எனவே, புனேவில் உள்ள ஐஇடி குண்டுகள் மேலாண்மை நிறுவனத்தில் இருந்து நிபுணர்கள் காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஐஇடி வகை குண்டுகளை சமாளிக்க எல்லா வகையிலும் தயார் நிலையில் இருக்கும்படி காஷ்மீர் முழு வதும் உள்ள பாதுகாப்புப் படையினர் அறிவுறுத்தப்பட் டுள்ளனர்’’ என்றார்.