

ஸ்ரீஹரிகோட்டா அருகே கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் எட்டு பேர் மீட்கப்பட்டனர். மேலும் 10 பேரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
வங்கக் கடலில் உருவான வார்தா புயல் நேற்று அதி தீவிர புயலாக மாறி, சென்னை மற்றும் ஹரிகோட்டா இடையே நேற்று கரையை கடந்தது. இதனால் வட தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் நேற்று சூறாவளிக் காற்றுடன், பலத்த மழை பெய்தது.
இதுகுறித்து, நெல்லூர் எஸ்பி விஷார் குன்னி கூறும்போது,
‘நெல்லூர் மாவட்டத்தில், வங்கக் கடலோரம் வசித்த சுமார் 9,400 பேரை அருகில் உள்ள பாது காப்பான இடங்களுக்கு அப் புறப்படுத்தினோம்.
ஹரிகோட்டா அருகே கடலில் தத்தளித்த தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும் 10 பேர் கடலில் சிக்கியுள்ளனர். அவர்களையும் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வர, மீட்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்’ என்றார்.
நேற்று காலை முதல் பிற்பகல் வரை, தடா மற்றும் வாகடுவில் முறையே 3 மற்றும் 4.8 செமீ மழை பதிவானதாக அவர் தெரிவித்தார்.
திருப்பதியில் பக்தர்கள் அவதி
திருப்பதியில் நேற்று முன்தினம் இரவு முதலே மழை பெய்து வருவதால், திருமலைக்கு வந்த பக்தர்கள் பெரிதும் சிரமப் பட்டனர். பக்தர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய பணியாளர் களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கோயில் நிர்வாக அலுவலர் சாம்பசிவ ராவ் தெரிவித்தார்.
ரயில்கள் ரத்து
வார்தா புயல் காரணமாக, சூலூர்பேட்டை சென்னை இடை யிலான பயணிகள் ரயில் சில வற்றை தெற்கு மத்திய ரயில்வே ரத்து செய்தது. விஜயவாடா-சென்னை பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் ரேணிகுண்டா மற்றும் அரக்கோணம் வழியாக திருப்பி விடப்பட்டது. சென்னை செல்லும் வேறு சில ரயில்களும் அரக் கோணம் வழியாக திருப்பி விடப்பட்டன.
‘வார்தா’ புயலால் நேற்று திருப்பதியில் பலத்த மழை பெய்தது.