விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை நிறுத்த கர்நாடக அரசு திட்டம்

விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை நிறுத்த கர்நாடக அரசு திட்டம்
Updated on
1 min read

கர்நாடக மாநிலத்தில் விவசாயி களுக்கு இலவசமாக வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்துவது குறித்து தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாக அம்மாநில மின்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.

கடந்த 6 மாதங்களாக கர்நாடக மாநிலம் முழுவதும் கடுமையான மின்வெட்டு நிலவி வருகிறது.பெங்களூர், மைசூர், மங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தினமும் 3 முதல் 6 மணி நேர மின் வெட்டு நிலவுகிறது. மற்ற பகுதிகளில் 5 முதல் 8 மணி நேர மின்வெட்டும் கிராமப்பகுதிகளில் 10 மணி நேரம் வரையிலும் மின்வெட்டு நிலவுகிறது.

இதனால் மாநிலத்தின் பல் வேறு பகுதிகளில் கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கர்நாடக மின் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் செவ்வாய்க்கிழமை பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

''கர்நாடகாவில் நிலவும் மின் வெட்டை சமாளிக்க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. எனவே போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் வெறுமனே அரசை குறை கூறுவதை நிறுத்திவிட்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

விவசாயிகளும் பொதுமக்களும் தொழிற்சாலை அதிபர்களும் மின் சார பற்றாக்குறையை உணர்ந்து அதற்கேற்றவாறு நடந்து கொள்ள வேண்டும். தேவையில்லாமல் மின் சாரத்தை வீணாக்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். மின்வெட்டு பிரச்சினையை உடனடியாக தீர்க்க கடவுளாலும் முடியாது.

விவசாயிகள் தங்களுக்கு மின் சாரம் இலவசமாக கிடைக்கிறது என்பதால் அதிக அளவில் வீணாக்கு கிறார்கள். அவர்களுக்கு மின்சாரத் தின் தேவையையும் அவசியத் தையும் உணர்த்தும் வகையில் இலவசமாக வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்துவது குறித்து அரசு பரிசீலனை செய்துவருகிறது.

சூரிய ஒளியிலிருந்து மின்சாரம்

கர்நாடகத்தில் நிலவும் மின் பற்றாக் குறையை தீர்க்க அரசு பல்வேறு வகையான நடவடிக்கைகளை வேகமாக எடுத்துவருகிறது. முதல்கட்டமாக மாநிலம் முழுவதும் சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தைப் பெற்று பயன்படுத்தும் திட்டத்தை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு மானியமாக‌ ரூ. 3,200 கோடி ஒதுக்கியுள்ளது'' என்றார்.

இது தொடர்பாக கர்நாடக எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டர் பேசுகையில்,''மின்வெட்டு பிரச் சினையை சமாளிப்பதில் கர்நாடக காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்து விட்டது.அமைச்சர் டி.கே.சிவக் குமார் விவசாயிகளை குற்றம் சாட்டுவதை நிறுத்திவிட்டு மின் வெட்டை தீர்க்கும் நடவடிக்கையில் அக்கறை காட்ட வேண்டும்''என்றார்.

அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் பேச்சுக்கு அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in