

சொத்துகளை தாமாக முன்வந்து சமர்ப்பிக்கும் திட்டத்தின் கீழ் (ஐடிஎஸ்) ரூ.13,860 கோடி சொத்துகளைக் கணக்கு காட்டி பொய்யான தகவலை வழங்கிய குஜராத் தொழிலதிபர் மகேஷ் ஷாவுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என கூறப்படுகிறது.
கணக்கில் வராத வருமானம், சொத்துகளைத் தாமாக முன் வந்து சமர்ப்பிக்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜூன் 1-ல் அறிமுகம் செய்தது. இத்திட்டம் செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்தத் திட் டத்தின் அடிப்படையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மகேஷ் ஷா என்பவர் தன்னிடம் ரூ.13,860 கோடி மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக வருமான வரித் துறையிடம் கணக்கு காண்பித்தார். ஐடிஎஸ் விதிப்படி இந்த சொத்துகளுக்கு முதல் தவணையாக ரூ.1,500 கோடியை வரியாக செலுத்த வேண்டும் என அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்தச் சூழலில் வரி செலுத்துவதற்கான காலக்கெடு முடிவடைந்ததும் மகேஷ் ஷா திடீரென தலைமறைவானார். இதைத் தொடர்ந்து மகேஷ் ஷாவின் அகமதாபாத் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் அவரையும் கண்டுபிடித்து, அண்மையில் கைது செய்தனர்.
அப்போது கமிஷனுக்கு ஆசைப்பட்டு பிறரது கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றவே ரூ.13,860 கோடி சொத்துகளைக் கணக்கு காட்டியதாக மகேஷ் ஷா ஒப்புக் கொண்டார்.
இந்நிலையில் பொய்யான தகவலை வெளியிட்ட மகேஷ் ஷாவுக்கு இந்திய வருமான வரிச் சட்டம் 277-வது பிரிவின்படி 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கக் கூடும் என வருமான வரித் துறையில் பணியாற்றும் பெயர் வெளியிட விரும்பாத உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.