

பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும் முன்பு, மேற்கொள்ளப்பட்ட ஆலோசனை விவரங்களை வெளியிட ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.
புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, கடந்த நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இம்முடிவை மேற்கொள்வதற்கு முன்பு, ரிசர்வ் வங்கி மத்திய வாரியத்தின் இயக்குனர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்களை வழங்குமாறு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சமூக ஆர்வலர் வெங்கடேஷ் நாயக் கோரியிருந்தார்.
ஆனால், தகவல் உரிமைச் சட்டத்தின் 8(1)(அ) பிரிவைக் காரணமாகக் கூறி, இதுகுறித்த விவரங்களை வழங்க ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது. இச்சட்டப்பிரிவின் படி, நாட்டின இறையாண்மை, தேசிய ஒருமைப்பாடு, போர் யுத்திகள், நாட்டின் பாதுகாப்பு, அறிவியல் மற்றும் பொருளாதார நலன்களை பாதிக்கும் தகவல்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்த ஆலோசனை விவரங்களை வெளியிட ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது. எனினும், இதே கோரிக்கையை முன்வைத்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக வெங்கடேஷ் கூறியுள்ளார்.
‘பண மதிப்பு நீக்க நடவடிக்கையை அமல்படுத்துவதற்கு முன்பு, அதுகுறித்த ரகசியத்தன்மை காக்கப்பட வேண்டியது அவசியம்தான். ஆனால், நடவடிக்கைக்குப் பிறகு, நாட்டில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் திண்டாடும் நிலையில், எந்த அடிப்படையில் இப்படியொரு முடிவு எடுக்கப்பட்டது எனக் கேட்பதில் நியாயம் உள்ளது’ என வெங்கடேஷ் குறிப்பிட்டார்.