

டெல்லியில் வீடின்றி வசிப்பவர்களில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லி கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி நீரஜ் பார்தி கூறுகையில், "கடந்த ஆண்டு நடை பெற்ற டெல்லி சட்டசபை தேர்தலின்போது வீடில்லாத சுமார் 7,000 பேர் வாக்காளர்களாக பதிவு செய்திருந்தனர். கடந்த மார்ச் 22-ம் தேதி நிலவரப்படி இந்த எண்ணிக்கை 8 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. இவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்ததுடன் நின்றுவிடாமல், வரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்" என்றார்.
வீடில்லாதவர்களும் இனி இந்த வாக்காளர் அட்டையை அடை யாள ஆவணமாகப் பயன்படுத்தி, சமையல் எரிவாயு இணைப்பு, வங்கிக் கணக்கு, ஓட்டுநர் உரிமம் மற்றும் இதர அரசின் நலத்திட்டங்களைப் பெற முடியும்.
இதுகுறித்து டெல்லியின் காஷ்மீர் கேட் பகுதியில் உள்ள ஒரு இரவு தங்கும் விடுதியில் வசித்து வரும் பான் சந்த் மிஷ்ரா (49) கூறுகையில், "அதிகாரிகள் சிலர் எங்கள் பகுதிக்கு வந்து வாக்காளர் பட்டியலில் சேர்வதற்கான படிவத்தை பூர்த்தி செய்து பெற்றுச் சென்றனர். இதன்படி, முதன்முறையாக எங்களுக்கு வாக்காளர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. நாட்டு குடிமக்களைப் போல நாங்களும் இந்தத் தேர்தலில் வாக்களிக்க உள்ளோம். தேர்தலுக்குப் பிறகும் இந்த அட்டை எங்களுக்கு பயன்படும்" என்றார்.
டெல்லியில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடில்லாமல் இருப்பதாக அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது. இவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும், பல்வேறு காரணங்களால் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க முடியவில்லை.