

லண்டன்: லண்டனில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இந்திய மாணவர் ஒருவர் தான் சார்ந்த கர்நாடக மாநிலத்தின் கொடியை ஏந்தி தனது மாநிலத்திற்கு நன்றி தெரிவித்தார். அவரது இந்த செயல் அடங்கிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கர்நாடக மாநில மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆதிஷ் ஆர் வாலி என்ற அந்த மாணவர் லண்டன் சிட்டி பல்கலைக்கழகத்தில் மேலாண்மை துறையில் எம்எஸ் பட்டம் பெற்றார். அவர் மேடையில் ஏறி தன்னுடைய பட்டப்படிப்புச் சான்றிதழை வாங்கும்போது கர்நாடக மாநில கொடியை ஏந்தினார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், "நான் லண்டன் சிட்டி யுனிவர்சிட்டியின் பேயஸ் பிசினஸ் ஸ்கூலில் மேலாண்மை துறையில் பட்டம் பெற்றுள்ளேன். நான் அந்த விழாவின் கர்நாடக மாநில கொடியை ஏந்தினேன். அது ஒரு பெருமித தருணம்" என்று பதிவிட்டிருந்தார்.
ஆதிஷ் இந்த வீடியோவை ஜனவரி 21 ஆம் தேதி பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோவுக்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்துள்ளன. அந்த வீடியோவின் கீழ் ஒரு பதிவர், "இந்திய கொடியைத் தான் ஏந்தியிருக்க வேண்டும்" என்று பதிவிட அதற்கு பதிலளித்த மற்றொரு பதிவர், "கர்நாடகா இப்போதும் எப்போதும் இந்தியாவின் மகள் தான். மாநிலப் பாடலின் முதல் வரியே ஜெய பாரத ஜனனிய தனு ஜாதே, ஜய ஹே கர்நாடக மாதே என்று உள்ளது. இந்திய தேசத்தின் மீது எங்களின் பற்றை யாரும் கேள்விக்குறியாக்க வேண்டாம்" என்று எழுதியிருந்தார். இளைஞர் ஆதிஷின் பதிவுக்கு பாராட்டுகளும் விமர்சனங்களும் குவிந்து வருகின்றன.