பிஹார் மாநிலத்தில் கார் மோதி 8 கி.மீ. தூரம் இழுத்து செல்லப்பட்ட முதியவர் உயிரிழப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

பாட்னா: பிஹார் மாநிலம் கிழக்கு சம்பரான் மாவட்டம் பங்ரா கிராமத்தைச் சேர்ந்த 70 வயது முதியவர் சங்கர் சவுதார். இவர் சைக்கிளில் பங்கரா சவுக் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றார். அப்போது கோபால் கன்ச் பகுதியிலிருந்து வேகமாக வந்த கார் சைக்கிள் மீது மோதியது. இதில் கார் முன் பகுதியில் இருக்கும் பானட்டில் விழுந்த சங்கர், வைப்பரை பிடித்து தொங்கியபடி காரை நிறுத்துமாறு கூச்சலிட்டுள்ளார். ஆனால், கார் டிரைவர் காரை நிறுத்தாமல் 8 கி.மீ. தூரம் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.

இதை ரோட்டில் பார்த்தவர்களும், காரை நிறுத்தும்படி கூச்சலிட்டு காரை பின்தொடர்ந்தனர். ஆனால், டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளார். மக்கள் பலர் காரை பின்தொடர்வதை அறிந்ததும், டிரைவர் திடீர் என பிரேக் போட்டார். இதனால் பானட்டில் இருந்த சங்கர் கார் முன் விழுந்தார். அவரை ஏற்றிவிட்டு கார் தப்பிச் சென்றது. இதில் சங்கர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த காரை பிடிக்க, அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், காரை ரோட்டோரம் நிறுத்திவிட்டு அதில் பயணம் செய்தவர்கள் தப்பிச் சென்றனர். போலீஸார் அந்த காரை பறிமுதல் செய்து உரிமையாளரை தேடி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in