

நாட்டில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்ட பிறகு, கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள டீக்கடைக்காரர் ஒரு வருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
அப்போது, அவர் வசமிருந்த ரூ.1.05 கோடி மதிப்புள்ள புதிய கரன்சி நோட்டுகள் உட்பட 1.45 கோடி ரொக்கப் பணம், ரூ.4.92 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.1.39 கோடி மதிப்புள்ள இதர ஆபரணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
டீக்கடை நடத்தி, வட்டிக்கு கடன் வழங்கும் பைனான்சியராக மாறிய இவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகை உள்ளிட்ட அனைத்தும் கணக்கில் வராதவை. இவற்றின் மொத்த மதிப்பு, ரூ.10.50 கோடி என, வரு மான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுவரை, 13 வங்கி லாக்கர்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. மேலும் 4 லாக்கர்களை அதிகாரிகள் இனிமேல் திறக்க உள்ளனர். அதன் பிறகு, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு மேலும் கூடும் எனத் தெரிகிறது.