''உச்ச நீதிமன்றத்தைவிட உயர்வானது பிபிசி என்ற நினைப்பு சிலருக்கு இருக்கிறது'': கிரண் ரிஜிஜூ விமர்சனம்

மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ
மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ
Updated on
1 min read

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தைவிட பிபிசி உயர்வானது என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது என மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ விமர்சித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பிரிட்டனின் பிபிசி செய்தி நிறுவனம் இரண்டு ஆவணப்படங்களை வெளியிட்டது. இந்த ஆவணப்படங்கள் கண்ணியமானவை அல்ல என்று மத்திய வெளியறவு அமைச்சகம் விமர்சித்தது. இந்த ஆவணப்படங்களை ஆதரித்து சிலர் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்டனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ''இந்தியாவில் உள்ள சிறுபான்மை சமூகம் உள்பட அனைத்து சமூகங்களும் நேர்மறையான எண்ணத்துடன் முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. நாட்டிற்கு உள்ளே இருந்து கொண்டும் வெளியே இருந்து கொண்டும் மேற்கொள்ளப்படும் இழிவான பிரச்சாரங்களால் நாட்டின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டுவிடாது. நாட்டில் உள்ள 140 கோடி மக்களின் ஒற்றைக் குரலாக நரேந்திர மோடியின் குரல் உள்ளது.

காலணி ஆதிக்கத்திற்கு ஆதரவான மனோபாவம் இந்தியாவில் உள்ள சிலருக்கு இன்னமும் இருக்கிறது. அவர்கள், உச்ச நீதிமன்றத்தைவிட பிபிசி-யை உயர்வானதாகக் கருதிக்கொண்டிருக்கிறார்கள். இதன்மூலம், அவர்கள் அந்நிய சக்திகளை திருப்திப்படுத்தும் நோக்கில் இந்தியாவின் புகழுக்கு களங்கள் விளைவிக்க முயல்கிறார்கள். இந்தியாவை பலவீனப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே இவர்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது.'' என விமர்சித்துள்ளார்.

பிபிசியின் ஆவணப்படம், கடந்த 2002ல் நிகழ்ந்த குஜராத் கலவரத்தோடு பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புபடுத்துவதாக இருந்தது. குஜராத் கலவரத்திற்கும் அப்போது அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கும் தொடர்பு இல்லை என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. இதை சுட்டிக்காட்டும் விதத்தில் கிரண் ரிஜிஜூ கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் உளவு அமைப்பான ராவின் முன்னாள் தலைவர் சஞ்சீவ் திருப்பதியும் பிபிசியின் இந்த ஆவணப்படத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்படத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in