

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ஆளும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் நேற்று வெளியிட்டார்.
உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும், அவரது சித்தப்பாவான ஷிவ்பால் யாதவுக்கும் இடையே கடும் அதிகார போட்டி நிலவி வருகிறது.
இந்த குடும்பச் சண்டை காரணத்தால், சமாஜ்வாதி கட்சிக்குள் கோஷ்டி பூசலும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் நேற்று வெளியிட்டார்.
மேலும் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாகவும் முலாயம் சிங் தெரிவித்துள்ளார். மொத்தம் 325 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் தற்போதைய எம்எல்ஏக்கள் 176 பேருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 78 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் பின்னர் வெளியிடப்படும் என முலாயம் சிங் தெரிவித்துள்ளார்.
இதில் ஆச்சரியப்படும்விதமாக குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கும் இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தேர்தலில் போட்டியிட ‘சீட்’ வழங்கக் கூடாது என அகிலேஷ் யாதவ் கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்தார். அப்படி இருந்தும் அவர்களுக்கு முலாயம் சிங் வாய்ப்பு அளித்திருப்பதால் தந்தை, மகனுடான உறவிலும், மாநில அரசியலிலும் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது