உக்ரைன் வான்வெளியை தவிர்க்க இந்திய விமானங்களுக்கு உத்தரவு

உக்ரைன் வான்வெளியை தவிர்க்க இந்திய விமானங்களுக்கு உத்தரவு

Published on

உக்ரைனில் மலேசிய பயணிகள் விமானம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, இந்தியாவிலிருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் அனைத்து விமானங்களும் உக்ரைன் வான்வெளி வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும் என்று விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பேசிய ஏர் இந்தியா தலைவர் ரோஹித் நந்தன், "நாங்கள் உக்ரைன் வான்வெளியை வழியாக செல்வதை தவிர்க்குமாறு அனைத்து விமானங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளோம். எங்களுக்கு பயணிகளின் பாதுகாப்பே பிரதானமானது” என்று தெரிவித்தார்.

இந்த தகவல், இந்திய விமானப் போக்குவரத்து துறையின் அறிக்கைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய விமானப் பாதுகாப்பு குழுமமான “யூரோ கன்ட்ரோல்”, அனைத்து விமானங்களும் செல்லும் கிழக்கு உக்ரைன் வான்வெளி வழியை மூடியது. இதனைத் தொடர்ந்து, இந்திய விமான போக்குவரத்துத் துறையும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

உக்ரைன் சம்பவத்தையைடுத்து, பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு விமானம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் மாற்றுவழியில் செலுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

விமானத்தில் இந்தியர்கள் இல்லை:

சுட்டுவீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் எம்.எச்.17-ல் இந்திய பயணிகள் யாரும் இல்லை என மக்களவையில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.

இறந்தவர்களில் 154 பேர் நெதர்லாந்தை சேர்ந்தவர்கள், 28 பேர் ஆஸ்திரேலியர்கள், 38 பேர் மலேசியர்கள், 11 பேர் இந்தோனேசியாவையும் சேர்ந்தவர்களாவர். இவர்களைத் தவிர ஜெர்மனி, பெல்ஜியம் நாடுகளைச் சேர்ந்த தலா 4 பேரும், பிலிப்பின்ஸ், கனடாவைச் சேர்ந்த ஒருவரும் இருந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in