

திரைப்பட நடிகையாக பல ஆண்டுகள் இருந்த ஜெயலலிதா, நாவல் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் இருந்துள்ளார். இதை தன் வாழ்வில் கனவாகவும் கொண்டவருக்கு அது ஒருநாள் நனவாகி உள்ளது.
கடந்த ஜூன் 1980-ல் 'ஒருத்திக்கே சொந்தம்' என்ற பெயரில் ஜெயலலிதாவின் முதல் நாவல் வெளியாகி இருந்தது. மாலைமதி பதிப்பகம் சார்பில் வெளியானதை, ஜெயலலிதா முதன்முறையாக எழுதி இருந்தார்.
தனது சிறுவயது முதலாக அவருக்கு நாவல் எழுதும் விருப்பம் இருந்துள்ளது. இதை அறிந்த திரைப்பட நகைச்சுவை நடிகரும் அவரது நெருங்கிய நண்பருமான சோ.ராமசாமி, ஜெயலலிதாவிடம் சிறுகதை எழுதும்படி கூறி உள்ளார். இதை ஏற்ற அவர் எழுதத் துவங்கிய சிறுகதை நீண்டதால் அது நாவலாகி விட்டது.
95 பக்கம் கொண்ட இந்த நாவல், ஒரு நாயகனுக்கும் இரு நாயகிகளுக்கும் இடையிலான பாசக்கதை ஆகும். இது, அந்த காலகட்டத்தில் வெளியான திரைப்படங்களுக்கு உகந்த வகையில் துவங்கி செல்லும் கதையம்சம் கொண்டதாக இருந்தது. ஆனால், அதன் வித்தியாசமான முடிவின் காரணமாக இது குறிப்பிட்ட வாசகர்கள் மட்டும் ஏற்கும் வகையில் இருந்தது.
இது குறித்து அந்த நாவலில் அவர் எழுதிய முன்னுரையில் ஜெயலலிதா, 'இந்த கதையின் மூலமாக நான் சொல்ல விரும்புகிற கருத்து மிகவும் எளிமையானது. மனித உள்ளம் என்பது மிகவும் வித்தியாசமானது. அதே சமயத்தில் மிகவும் குறுகியது. தீங்கு செய்தவர்களை மன்னித்து அவர்களை ஆதரிக்கும் தன்மை கொண்ட ஒரு மனிதனின் உள்ளம் வித்தியாசமானது. ஆனால், காதல் என்று வரும் பொழுது, அவன் உள்ளம் 'ஒருத்திக்கே சொந்தம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சராசரி மனிதனான நாவலில் அறிமுகமாகும் நாயகனுக்கு அவரது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட நாயகியுடன் காதல் வளர்கிறது. சூழல் காரணமாக அந்த நாயகனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் திருமணம் செய்ய முடியவில்லை.
பிறகு திரைப்படங்களின் பிரபல நடிகராகிவிட்ட நாயகனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் முடிந்து ஒரு மகனும் பிறக்கிறான். பிறகு ஒருநாள் அந்த நிச்சயிக்கப்பட்ட பெண், தன் பார்வை இழந்த நிலையில் நாயகனை சந்திக்க நேருகிறது. இதனால், இருவருக்குள் மீண்டும் மலரும் உறவால் பல திருப்பங்கள் நிகழ்கிறது. இருவருக்கு இடையே, நாயகனின் மனைவி பெரும் மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார். இறுதியில் வேறுவழியின்றி அவர் தன் நாயகனுடனான பிரிவை தவிர்க்க ஒரு துணிச்சலான முடிவு எடுக்கிறார். இதில், தன் கணவர் காதலிக்கும் பெண்ணையும் தன் குடும்ப வாழ்வுடன் இணைத்துக் கொள்கிறார்.
இந்த நாவலில் திரைப்பட உலகில் நிகழும் சில அன்றாட வாழ்க்கை முறையை ஜெயலலிதா தத்ரூபமாக சித்தரித்துள்ளார். இதற்கு அவர் அத்துறையை சார்ந்திருந்தது காரணமாக இருக்கலாம். அதேபோல், நாயகன் வசிக்கும் மற்றும் தன் காதலிக்காக அமைக்கும் பங்களாக்களில் அமைந்துள்ள வசதிகள் பற்றியும் அவர் தெளிவாகக் கூறுகிறார். இத்துடன், எழுத்தாளர்கள் அல்லது நாவலசிரியர்களுக்கே உரிய வர்ணனைகள் நாவலில் மிகவும் குறைவாக இருந்தன.
எனினும், நாவலின் கதை விறுவிறுப்புடன் கூறப்பட்ட விதம் ஒரு எதிர்பார்ப்புடன் தொடர்கிறது. இருப்பினும், இதன் பிறகு ஏனோ ஜெயலலிதா தான் நாவல் எழுதுவதை தொடரவில்லை. இதை எழுதும் போது அவர் அரசியலில் நுழைந்திருக்கவில்லை. ஆனால், இந்த நாவலில் சமூகத்தின் யதார்த்த நிலையை பிரதிபலிக்கும் வகையில் ஒரு கருத்தையும் தன் நாவலில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தன் முன்னுரையில், 'சட்டம் என்பது உலகில் மனிதன் அமைதியாக ஒரு கட்டுப்பாட்டுடன் இயங்க வேண்டும் என்பதற்காக, மனிதர்களே பல விதிமுறைகளையும், சட்டங்களையும் உருவாக்கி இருக்கிறார்கள். சில தனிப்பட்ட பிரத்யோகமான சூழ்நிலைகளில், இந்த சட்டங்களை பின்பற்றுவதே, ஒருவருக்கு அநீதியை இழைப்பதாக மாறிவிடும். சட்டம் எல்லாவிதமான சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கும் உதவுவதில்லை' எனக் கூறியுள்ளார்.
மற்ற நூல், தொடர்கள்
ஜெயலலிதாவின் இந்த சமூகக் கருத்தை பிரதிபலிக்கும் வகையில் எழுதப்பட்ட நாவலின் பின்னணியில் ஆசிரியர் சோ இருந்திருக்கிறார். இதற்கும் முன்பாக அவரது துக்ளக் இதழில், 'எண்ணங்கள் சில' எனும் பெயரில் ஒரு தொடர் சுமார் 7 வருடங்கள் வெளியானது. அதை எழுதுபவர் ஒரு பிரபலமானவர் என மட்டும் கூறி பெயரை குறிப்பிடாமல் தவிர்த்தனர். பிறகு கடைசியாக அந்த தொடரை முடிக்கும் போது இதை எழுதியவர் ஜெயலலிதா என்றும், அவர் அரசியலுக்கு வந்து விட்டதால் இத்துடன் அவர் தொடரை முடிப்பதாகவும் சோ கூறி இருந்தார்.
'நீயின்றி நான் இல்லை' எனும் தலைப்பில் ஜெயலலிதா எழுதிய மற்றொரு நாவல், வலம்புரிஜானின் கவிதாபானு பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டிருந்தது. இதற்கிடையில், 'ஒருவனுக்கு ஒருத்தி' எனும் பெயரில் மாலைமதி வெளியிட்ட நிறுவனத்தின் குமுதம் வார இதழில் தன் வாழ்க்கை வரலாற்றை போல் 'நெஞ்சில் ஒரு கனல்' எனும் பெயரில் ஒரு தொடர் எழுதினார் ஜெயலலிதா. பிறகு இது 'தாய்' இதழிலும் தொடராக தொடர்ந்து எழுதினார்.
இதே தாய் இதழில் 'மனதை தொட்ட மலர்கள்' எனும் பெயரிலும் கட்டுரைகளாக ஜெயலலிதா எழுதினார். இதில், அவர் தனக்கு பிடித்த மலர், பாடல், மிருகம், பத்திரிகை ஆசிரியர் என தனக்கு பிடித்தவைகள் பற்றித் தொடராக எழுதினார்.