Published : 21 Jan 2023 07:44 PM
Last Updated : 21 Jan 2023 07:44 PM

"நேதாஜியின் கொள்கைகளும் ஆர்எஸ்எஸ்-ன் கொள்கைகளும் நேரெதிரானவை" - அனிதா போஸ் பாஃப் 

அனிதா போஸ் பாஃப் | கோப்புப்படம்

கொல்கத்தா: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த தினத்தை நாடு முழுவதும் கொண்டாட ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ள நிலையில், ஆர்எஸ்எஸ்-ன் இந்த முயற்சி நேதாஜியின் பாரம்பரியத்தை சுரண்டும் செயல் என்று அவரது மகள் அனிதா போஸ் பாஃப் விமர்சித்துள்ளார்.

ஜனவரி 23 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள். இந்த நாளை நாடு முழுவதும் கொண்டாட ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக ஜெர்மனியில் வசித்துவரும் அனிதா போஸ் பாஃப் இடம் செய்தி நிறுவனம் ஒன்று தொலைப்பேசி வாயிலாக பேட்டி எடுத்துள்ளது. அந்த நேர்காணலில், "நேதாஜி போதித்த அனைத்து மதங்களையும் மதிக்கும் கொள்கையை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஆகியவற்றால் பிரதிபலிக்க முடியாது. நேதாஜி ஒரு இந்துவாக இருந்த போதிலும் பிற மதத்தினரின் நம்பிக்கைகளை மதிக்கவேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார். பல்வேறு மத பற்றாளர்களிடையில் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை உருவாக்குவதற்கு அவர் ஆதரவாக இருந்தார்.

ஆர்எஸ்எஸ்-ம் பாஜகவும் இந்த நடைமுறையை பிரதிபலிப்பதில்லை. எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், அவர்கள் வலதுசாரிகள்; நேதாஜி இடதுசாரி. ஆர்எஸ்எஸ் குறித்து நான் கேள்விப்பட்டதை வைத்து சொல்ல வேண்டும் என்றால், அவர்களின் கொள்கையும் நேதாஜியின் கொள்கையும் எதிரெதிர் துருவங்கள். அவை ஒத்துப்போக முடியாதவை. நேதாஜியின் கொள்கைகளை ஆர்எஸ்எஸ் பின்பற்ற விரும்பும் என்றால் அது மிகவும் நல்ல விஷயம். பல்வேறு பிரிவினர் பல்வேறு வகையில் நேதாஜியின் பிறந்தநாளை கொண்டாட விரும்புகின்றனர். அவர்கள் நேதாஜியின் கொள்கைகளுடன் உடன்படுவது மிகவும் அவசியம்.

ஆர்எஸ்எஸ்-ஐ நேதாஜி விமர்சித்தாரா என்பது குறித்து எனக்குத் தெரியாது. இதுதொடர்பாக நேதாஜியின் எந்த மேற்கோள்களையும் நான் உங்களுக்கு சுட்டிக்காட்ட முடியவில்லை. ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் குறித்து அவருக்கு விமர்சனங்கள் இருந்திருக்கலாம். ஆர்எஸ்எஸ் குறித்த அவரின் (நேதாஜி) பார்வை என்ன என்பது எனக்குத்தெரியும். மதச்சார்பின்மை குறித்த நேதாஜியின் கருத்தும், ஆர்எஸ்எஸ்-ன் கருத்தும் ஒருபோதும் ஒன்றிணைய முடியாது.

நேதாஜியை பெருமைப்படுத்த மத்தியில் ஆளும் பாஜக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தது பாராட்டுக்குரியது. அது இரண்டு பார்வைகளைக் கொண்டது. சுதந்திரத்திற்கு பின்னர், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு நேதாஜியை விலக்கி வைத்தது. அவரின் பங்களிப்பு அனைத்து காங்கிரஸ்காரர்களிடமும் எடுத்துச்செல்லப்படவில்லை. சட்டமறுப்பு இயக்கமே நாட்டின் விடுதலைக்கு வழிவகுத்தது என்று அது வரையறுக்க விரும்பியது. ஆனால் நேதாஜியின் கோப்புக்கள் தொகுக்கப்பட்ட போது, விடுதலைப்போராட்டத்தில் இந்திய தேசிய ராணுவம் முக்கியமான பங்காற்றியுள்ளது எங்களுக்கு தெரியவந்தது.

இரண்டாவதாக, நேதாஜியை பெருமைப்படுத்த பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. எந்த ஒரு அரசியல்வாதியும் முதலில் அவர்களின் நலனை பேணுவார்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். நேதாஜி தற்போது உயிருடன் இருந்து, இந்த அரசாங்கத்திடமிருந்து மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தார் என்றால், பாஜக நிச்சயம் அவரை பெருமைப்படுத்தாது. இப்போது அவரைக் கொண்டாடுவதில் பாஜகவிற்கு நலன் இருப்பதால் அவர்கள் அதனைச் செய்கிறார்கள்" என அனிதா போஸ் பாஃப் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, நேதாஜியின் 125ம் பிறந்தநாளின் போது அவரது பெருமையை வெளிக்கொண்டு வர திரிணாமூல் காங்கிரஸ் அரசும், பாஜகவும் முயற்சிகள் எடுத்தன. கடந்த 2015ம் ஆண்டு மேற்குவங்க அரசு உள்துறையின் மூலம் நேதாஜியின் 64 கோப்புகளை வெளியிட்டது. அடுத்த ஆண்டு மத்தியில் ஆளும் மோடி அரசாங்கம் 100 கோப்புகளை வெளியிட்டது.

நேதாஜியின் மறைவில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க சுதந்திரத்திற்குப் பின்னர் மத்திய அரசு மூன்று குழுக்களை அமைத்தது. அவைகளில் ஷா நவாஸ் கமிஷனும், கோஸ்லா கமிஷனும் காங்கிரஸ் ஆட்சியில் அமைக்கப்பட்டவை. அவை இரண்டும் நேதாஜி, 1948ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி தைவானின் தாய்கோகு விமானநிலையத்திலிருந்து புறப்பட்டு சென்ற போது விமான விபத்தில் உயிரிழந்தார் என்ற முடிவுக்கு வந்தன. மூன்றாவது, பாஜக தலைமையிலான கூட்டணி அரசு அமைத்த முகர்ஜி கமிஷன் அவர் அவ்வாறு இறக்கவில்லை என்று கூறியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x